Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மத்திய பட்ஜெட் வானவில் போன்றது பார்க்கத்தான் அழகு, பயன் ஏதும் இல்லை: கி.வீரமணி

பிப்ரவரி 02, 2019 03:18

சென்னை: திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பிரதமர் மோடி தலைமையிலான அரசின் பதவிக்காலம் இன்னும் 60 நாட்கள் கூட இல்லாத நிலையில், அந்த அரசால் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் ஒரு இடைக்கால ‘பட்ஜெட் 2019-2020’ என்பது உலகறிந்த உண்மை. 

ஆனால் இந்த வரவு- செலவுத் திட்டத்தினை ஏதோ அடுத்த 5 ஆண்டு காலத்திற்கும் இவர்களுக்கு பட்டா எழுதிக் கொடுத்தது போல, பல தேன் தடவிய வாக்குறுதிகளை அள்ளி வீசியிருப்பது எதை காட்டுகின்றது? 

மலையை நகர்த்தி வைக்க 30 நாள் எனக்கு ஊட்டச்சத்துணவு தந்து பராமரியுங்கள் என்று கூறி, அதை நம்பி 30 நாட்களும் உணவு கொடுத்து ஊக்க மூட்டினால்-கெடு நாள் வந்தவுடன், “அதை தூக்கி என் தோளில் வைத்தால் வேறு இடத்தில் அதை மாற்றி வைத்து விடுகிறேன்” என்று கூறி மோடி வித்தைக் காரரைப்போல, மோடி அரசின் பட்ஜெட் பல்வேறு ஒப்பனைகளை வைத்து தாக்கல் ஆகியிருக்கிறது. 

இதை நிதிநிலை அறிக்கை என்பதைவிட பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கை என்று கூறுவதே மிகவும் பொருத்தமாகும். முந்தைய தேர்தல் வாக்குறுதிகளில் 15 லட்ச ரூபாய் அவரவர் வங்கிக் கணக்கில், கருப்பு பணத்தை மீட்டு போடுவோம் என்பது நடந்ததா? ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்பது நிறைவேற்றப்பட்டதா? அதன் ரகசியத்தை நிதின் கட்கரி உடைத்தாரே, நினைவில்லையா? 

விவசாயிகளின் வேதனைகளும், தற்கொலைகளும் கடந்த நான்கே முக்கால் ஆண்டு மோடி-பா.ஜனதா-ஆர்.எஸ்.எஸ். ஆட்சியில் குறைந்ததா? தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் குறி வைத்து தாக்கப்படுவதோடு, அவர்களது வாழ்வாதாரத்தைப் பறிக்கும் நிகழ்வுகள் அன்றாட கொடுமைகளாகத் தொடரும் நிலையில், அடுத்து வந்தால், மீனவருக்கென ஒரு தனி அமைச்சகம் அமைப்பாளர்களாம். 

இது மீனவ சமூகத்தை ஏமாற்றுவதெல்லாமல், வேறு என்ன? தனி அமைச்சகம் இல்லாததால்தான் அவர்களுக்கு எதிராக அன்றாடம் நடைபெறும் அநீதி - அக்கிரமங்களைத் தடுக்க முடியவில்லையா? எப்படி சிரிப்பது என்றே தெரியவில்லை. அதுவும் கடந்த நான்கரை ஆண்டுகளில் உதயமாகாத ஞானோதயம் - புது புருடா- இப்போதூன் தோன்ற வேண்டுமா? மரபுகள் மீறப்பட்டு, தங்களது அதிகார எல்லை தாண்டிய வாக்குறுதிகளை போலவே, நிதி ஆதாரங்களைப்பற்றி கவலையே இன்றி, ‘மெகா’, ‘மெகா’ திட்டங்களை கூறியுள்ளது. 

இந்த பட்ஜெட் மூலம் புதுவேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுமா? என்ற கேள்வியை விட நம் இளைஞர்களுக்கு பறி போன வேலைவாய்ப்பு மீண்டும் கிடைக்குமா? என்ற கேள்விக்காவது விடை இருக்கிறதா? தேடிப் பாருங்கள் புரியும். மொத்தத்தில் பட்ஜெட் வானவில் போன்றது. இது பார்க்க அழகு. பயன் ஏதும் இல்லை என அவர் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்