Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

23-ந்தேதி சுற்றுப்பயணம் தொடங்கும் சசிகலா

ஜுலை 16, 2021 03:56

சென்னை: ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவிக்கு அவரது தோழி சசிகலா தேர்வு செய்யப்பட்டார். பின்னர் கட்சியின் துணை பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரனை அவர் நியமித்தார். இந்த நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் இருந்த போது 2017-ம் ஆண்டு செப்டம்பர் 12-ந் தேதி சென்னையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூடியது.

அதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலாவும், துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்றும் அவர்களை பதவி நீக்கம் செய்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதை எதிர்த்து சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் சசிகலாவும், தினகரனும் வழக்கு தொடர்ந்தனர்.

தினகரன் தனிக்கட்சி தொடங்கியதால் மனுவை வாபஸ் பெற்றார். ஆனால் சசிகலா வழக்கை தொடர்ந்து நடத்த முடிவு செய்துள்ளார். இந்த நிலையில், சசிகலாவின் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க. நிர்வாகிகள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு வருகிற 20-ந் தேதிக்குள் பதில் அளிக்குமாறு சசிகலாவுக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே கடந்த தேர்தலின் போது அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்த சசிகலா மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், தொண்டர்களுடன் போனில் பேசி வருகிறார்.
அவர் தொண்டர்களிடம் பேசிய 150-க்கும் மேற்பட்ட ஆடியோக்கள் இதுவரை வெளியாகி உள்ளன. இந்த நிலையில் சசிகலா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வருகிற 23-ந் தேதி அவர் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. சசிகலா வருகிற 23-ந் தேதி ஜெயலலிதா சமாதிக்கு செல்கிறார். அங்கு அஞ்சலி செலுத்தி விட்டு தனது சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பதாக பரபரப்பாக பேசப்படுகிறது.
ஜெயலலிதா சமாதிக்கு சசிகலா தனியாக செல்ல போலீசாரிடம் அனுமதி பெற வேண்டியதில்லை. ஆனால் 100-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் அவர் ஜெயலலிதா சமாதிக்கு செல்ல போலீசாரிடம் அனுமதி பெற வேண்டும்.

எனவே போலீசாரிடம் அனுமதி பெறும் திட்டமும் அவரிடம் இருப்பதாக தெரிகிறது. போலீஸ் அனுமதி கிடைத்ததும் சசிகலா தனது சுற்றுப் பயணத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக சசிகலா வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் கூறியதாவது:-

ஊரடங்கில் என்னென்ன தளர்வுகள் அறிவிக்கப்பட இருக்கிறது என்று எதிர்பார்க்கிறோம். அரசியல் கூட்டங்கள் நடத்த அனுமதி கொடுத்தால் சசிகலா சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திப்பார். ஜெயலலிதா சமாதிக்கு சசிகலா செல்வதற்கும், அவர் சுற்றுப்பயணம் செய்வதற்கும் போலீசில் பாதுகாப்பு கேட்டு மனு கொடுக்க உள்ளோம் என்றார்.

தலைப்புச்செய்திகள்