Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மும்பையில் பலத்த மழை- ரெயில் சேவை பாதிப்பு

ஜுலை 16, 2021 04:01

மும்பை: தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து மும்பையில் பலத்த மழை பெய்து வருகிறது. அனைத்து சாலைகளிலும் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 4 மணியளவில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 3 மணி நேரம் மழை கொட்டியது. மும்பை, தானே, நவிமும்பை, பல்ஹர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இடைவிடாத மழை காரணமாக ரெயில் தண்டவாளங்களை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் உள்ளூர் ரெயில் சேவையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

ரெயில்கள் நடுவழியிலும், ரெயில் நிலையத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டன. ரெயில் போக்குவரத்து முடங்கியதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

அதே போல் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் பஸ் மற்றும் மற்ற வாகனங்கள் போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டது. இன்று காலை 3 மணி நேரத்தில் மும்பை நகரில் 3.6 செ.மீ. மழையும், கிழக்கு புறநகரில் 7.5 செ.மீ. மழையும், மேற்கு புறநகரில் 7.3 செ.மீ. மழையும் பெய்துள்ளது.

மும்பை நகர் மற்றும் புறநகரில் தொடர்ந்து மழை நீடிக்கும் என்றும், புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்