Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஓசூர்- பெங்களூரு இடையே மின்சார ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

ஜுலை 16, 2021 04:54

ஓசூர்: கரோனா இரண்டாவது அலை எதிரொலியாக கடந்த இரண்டு மாதங்களாக ஓசூர் - பெங்களூரு இடையே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார ரயில் சேவை நேற்று முதல் மீண்டும் தொடங்கியது. கரோனா இரண்டாவது அலை தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் கடந்த மே மாதம் 10-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதேபோல கர்நாடக மாநிலத் திலும் முழு ஊரடங்கு செயல்படுத்தப்பட்டதால், இரு மாநிலங்களுக்கிடையே முதலில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து, ஓசூர் - பெங்களூரு இடையே இயங்கி வந்த மின்சார ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது. தற்போது கரோனா இரண்டாவது அலை குறைந்துள்ள நிலையில் ஓசூர் - பெங்களூரு இடையே மின்சார ரயில் சேவை நேற்று முதல் மீண்டும் தொடங்கி உள்ளது. நேற்று காலை 9.25 மணிக்கு கே.எஸ்.ஆர்.பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட மின்சார ரயில், காலை 11 மணிக்கு ஓசூர் ரயில் நிலையம் வந்து சேர்ந்தது. இந்த ரயிலில் 16 பெட்டிகள் இணைக்கப்பட்டு சுமார் 1,500 பேர் பயணிக்கும் வசதி உள்ளது. இந்த ரயிலில் ஓசூர் - பெங்களூரு இடையே பயணிக்க பயணச்சீட்டு கட்டணம் ரூ.20.

இதுகுறித்து ஓசூர் ரயில்நிலைய மேலாளர் குமாரன் கூறியதாவது, கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓசூர் - பெங்களூரு மின்சார ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் தினமும் (ஞாயிற்றுக்கிழமை தவிர) காலை 9.25 மணிக்கு பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு ஓசூர் ரயில் நிலையத்துக்கு காலை 11 மணிக்கு வருகிறது. ஓசூரிலிருந்து மதியம் 12 மணிக்கு புறப்பட்டு பையப்பனஹள்ளி ரயில் நிலையம் வரை செல்கிறது. பின்பு பிற்பகல் 2 மணிக்கு ஓசூருக்கு வரும் இந்த ரயில் இங்கிருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு கே.எஸ்.ஆர் பெங்களூரு ரயில் நிலையம் வரை செல்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்