Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஷியா முஸ்லிம் தலைவர் ரிஜ்வீ மீது பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு

ஜுலை 16, 2021 05:12

உத்தரப்பிரதேசத்தின் ஷியா பிரிவு முஸ்லிம் தலைவரான வசீம் ரிஜ்வீ மீது பாலியல் பலாத்காரப் புகார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரிடம் ஓட்டுநராக இருந்தவரின் மனைவியின் புகாரை விசாரித்த லக்னோ நீதிமன்றம் இதற்காக உத்தரவிட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் ஷியா முஸ்லிம் மத்திய வஃக்பு வாரியத்தின் முன்னாள் தலைவர் வசீம் ரிஜ்வீ. தற்போது அவ்வாரியத்தின் உறுப்பினராகவும் உள்ளார். தனது இந்துத்துவா ஆதரவு நிலைப்பாடு காரணமாக ரிஜ்வீ தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அயோத்தியின் ராமர் கோயில் வழக்கில் இந்துக்களுக்கு ஆதரவாகவும் ரிஜ்வீ பேசியிருந்தார்.

கடைசியாக மார்ச்சில் இவர் முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆனின் சில வாசகங்களை நீக்க வேண்டும் எனவும், அவை தீவிரவாதத்தை வளர்ப்பதாகவும் கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இம்மனுவை கடந்த ஏப்ரலில் தள்ளுபடி செய்த நீதிமன்றம் இதற்காக ரிஜ்வீக்கு ரூ.50,000 அபராதமும் விதித்தது. இதையடுத்து, வசீம் ரிஜ்வீ புதிதாக பாலியியல் பலாத்கார வழக்கில் சிக்கியுள்ளார்.

ஷியா வக்பு வாரியத்தின் தலைவராக ரிஜ்வீ இருந்த போது அவரிடம் ஓட்டுநராக இருந்தவரது மனைவி இப்புகாரை அளித்துள்ளார். கடந்த ஜூன் 22 இல் லக்னோவின் சாதத்கன்ச் காவல்நிலையத்தில் அளித்த போது வழக்குப் பதிவு செய்ய மறுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட பெண், லக்னோ மாவட்ட நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இதில், ரிஜ்வீ மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்து விசாரிக்கும்படி நீதிபதி உத்தரவிடப்பட்டுள்ளார்.

இதையடுத்து ரிஜ்வீ மீது சாதத்கன்ச் காவல்நிலையத்தார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர். இதில் ரிஜ்வீயை கைது செய்ய அதற்கான ஆதாரங்களை தேடும் முயற்சியிலும் லக்னோ போலீஸார் ஈடுபட்டுள்ளனர். தனது புகாரில் அப்பெண் கூறும்போது, ‘ஷியா வஃக்பு வாரியத் தலைவராக ரிஜ்வீ இருந்த போது தன் கணவரை வேண்டும் என்றே வெளியூர்களுக்கு அனுப்பினார். பிறகு பணியாளர் குடியிருப்பிலிருந்த தன்னை ஐந்து வருடங்களுக்கு முன் ரிஜ்வீ பலாத்காரம் செய்தார்.

இதை வெளியில் கூறினால் கொன்று விடுவதாகவும் கூறி, ஆபாச வீடியோவாகவும் என்னை பதிவு செய்து மிரட்டி என்னை தொடர்ந்து கடந்த மாதம் வரை பலாத்காரம் செய்தார்,’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இப்புகாரில் மேலும், ஐந்து வருட சம்பவத்தை கடந்த மாதம் தனது கணவரிடம் கூறிய பின் அவர் ரிஜ்வீயின் வீட்டிற்கு சென்று தட்டிக் கேட்டிருந்தார். அப்போது ஓட்டுநரை அடித்து மிரட்டி திருப்பி அனுப்பியதாகவும் ரிஜ்வீ மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், ரிஜ்வீக்கு சிக்கல் அதிகரித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்