Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மதுரையில் வீட்டுவசதி வாரியத்தைக் கண்டித்து மின்கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற விவசாயி

ஜுலை 17, 2021 12:34

மதுரை: மதுரைமாவட்டம், உச்சப்பட்டி தோப்பூர் பகுதியில் துணைக்கோள் நகரம் அமைக்க தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் 600 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களை கையகப்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் விசாரணையில் உள்ளன.

அதேபோல், உச்சப்பட்டியைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணியனின் (55) நிலத்தின் ஒரு பகுதியையும் வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்தியுள்ளது. இந்த கையகப்படுத்தப்பட்ட நிலத்திலுள்ள கிணறு மூலம் தான் சுப்பிரமணியன் மீதமுள்ள தனது நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சி சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் கிணற்றை சுப்பிரமணியன் பயன்படுத்த முடியாத வகையில், பம்புசெட்டுக்கான மின்சாரத்தை துண்டிக்க வீட்டு வசதி வாரியம் நடவடிக்கை எடுத்தது. திடீரென எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையால் விளைச்சல் பாதிக்குமே என விரக்தியடைந்த சுப்பிரமணியன் வீட்டு வசதி வாரிய நிர்வாகத்தைக் கண்டித்து, நேற்று மதியம் 2.30 மணிக்கு அவரது வயல் அருகிலுள்ள உயர்மின் கோபுரத்தில் ஏறி, தற்கொலைக்கு முயன்றார்.

இது பற்றி தகவல் அறிந்த ஆஸ்டின்பட்டி காவல் உதவி ஆய்வாளர் சாமியப்பன் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். வீட்டு வசதிவாரிய பொறியாளர் உள்ளிட்டோரும் அங்கு வந்தனர். அவர்கள் 30 நிமிடங்களுக்கு மேலாக சமரசம் பேசியதைத் தொடர்ந்து மின் கோபுரத்திலிருந்து சுப்பிரமணியன் கீழே இறங்கினார்.
 

தலைப்புச்செய்திகள்