Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மேகதாது அணை விவகாரம்; மத்திய நீர்வளத்துறை அமைச்சருடனான சந்திப்பு நம்பிக்கை அளிக்கிறது: திருமாவளவன்

ஜுலை 17, 2021 12:35

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, இந்திய நீர்வளத்துறை அமைச்சருடனான சந்திப்பு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக, திருமாவளவன் நேற்று (ஜூலை 16) வெளியிட்ட அறிக்கை:

"மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துடன் நடந்த தமிழக அனைத்துக் கட்சிக் குழுவினரின் சந்திப்பு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

கடந்த ஜூலை12 அன்று தமிழக முதல்வர் ஸ்டாலினின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், இன்று (ஜூலை16) தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் 13 கட்சிகளின் தலைவர்களைக் கொண்ட குழு டெல்லியில் மத்திய அமைச்சர் ஷெகாவத்தைச் சந்தித்தோம்.

ஏறத்தாழ ஒரு மணிநேரம் நடந்த அச்சந்திப்பில், தமிழக தரப்புக் கருத்துகளை துரைமுருகன் எடுத்துரைத்தார். குறிப்பாக, விவரத் திட்ட அறிக்கை (DPR) தயார் செய்வதற்காக கர்தாடக அரசுக்கு அளிக்கப்பட்ட அனுமதியைத் திரும்ப பெற வேண்டுமென்றும் மேகதாதுவில் எந்தவொரு கட்டுமானத்துக்கும் அனுமதி அளிக்கக் கூடாதென்றும் வலியுறுத்தினார். அதற்கான மனு ஒன்றையும் அவரிடம் அளித்தார்.

இந்த இரு கோரிக்கைளையொட்டியே தமிழகத்தைச் சார்ந்த அனைவரும் வலியுறுத்திப் பேசினோம். இதற்கு மத்திய அமைச்சர் விளக்கமளித்துப் பேசியபோது, 'தான் யாருக்கும் ஒருசார்பாக இல்லை' என்பதை அழுத்தமாகக் குறிப்பிட்டார். அத்துடன், 'பிலிகுண்டு அணைக்கும் கபினி அணைக்குமிடையிலான நீர்ப்பிடிப்புப் பகுதி தமிழகத்துக்குரிய நிலப்பரப்பாக உரிமை கோருவது கூடாது' என்றும் கூறினார்.

கர்நாடக அரசுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவதாக தமிழக மக்களிடையே அச்சம் உருவாகியிருப்பதற்கு காரணம், விவரத் திட்ட அறிக்கை தயாரிக்க அந்த மாநில அரசுக்கு அனுமதி அளித்திருப்பது தான் என்றும், எனவே, அதனை உடனே திரும்ப பெற வேண்டுமெனவும் நமது தரப்பில் யாவரும் ஒரே குரலில் வலியுறுத்தினோம்.

அப்போது, 'அந்த அனுமதி நான்கு நிபந்தனைகளின் அடிப்படையில் தான் வழங்கப்பட்டுள்ளது' என்றும், 'அது அணைக்கட்டுவதற்கான அனுமதியென கருத வேண்டாம்' என்றும் விளக்கமளித்தார். அதாவது, 'மத்திய நீர் ஆணையம்(CWC), காவிரி நீர் மேலாண்மைக் கழகம் (CWMA) ஆகியவற்றின் ஒப்புதலும் பாசன உரிமையுள்ள மாநிலங்களின் ஒப்புதலும் தேவை; மற்றும் அறிக்கை தயாரிப்பதற்கான செலவுக்கு மத்திய அரசு பொறுப்பேற்காது ஆகிய நிபந்தனைகளுடன்தான் அனுமதி வழங்கியள்ளோம்' என விவரித்தார். எனினும், இது தவறு என்பதை நமது தரப்பில் சுட்டிக்காட்டினோம்.

நிறைவாக, அந்த நிபந்தனைகளின்படி தமிழகத்தின் ஒப்புதலின்றி கர்நாடக அரசால் அணைகட்ட இயலாது தானே? அதனை உறுதிப்படுத்துங்கள் என்று வினவியதற்கு, 'ஆமாம்' என அமைச்சர் ஷெகாவத் ஒப்புக்கொண்டார். டெல்லியிலும் கர்நாடகாவிலும் ஒரே கட்சி ஆளுங்கட்சி என்கிற நிலையில், அவர்களுடன் மத்திய அரசு மிகுந்த நெகிழ்வாக நடந்துகொள்ளும் போக்கு வெளிப்படையாக தென்படுகிறது.

எனினும், தமிழக மக்களை முற்றாக பகைத்துக் கொள்ளவோ, பட்டவர்த்தனமாக சட்டத்துக்குப் புறம்பான முறையில் செயல்படவோ மத்திய அரசால் இயலாது என்கிற நம்பிக்கை இச்சந்திப்பில் நமக்கு உருவாகியிருக்கிறது. இந்நிலையில், நம்பிக்கையுடனும் விழிப்புடனும் ஒருங்கிணைந்து தொடர்ந்து செயல்பட்டு தமிழகத்துக்கு எதிரான சதிமுயற்சிகளை முறியடிப்போம்!".

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்