Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழக - ஆந்திர எல்லையில் பாலாற்றின் குறுக்கே அணை கட்டியே தீருவோம்: குப்பம் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் உறுதி

ஜுலை 17, 2021 12:39

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு கடந்த 2003-ம் ஆண்டு 0.6 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அணை கட்ட குப்பம் அருகே கணேசபுரம் பகுதியில் இடம் தேர்வு செய்தது. ஆனால் தமிழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் அணை கட்டுவது சாத்தியமாகவில்லை.

அதன் பிறகு அமைந்த சந்திரபாபு நாயுடு ஆட்சியில் பாலாற்றின் குறுக்கே 22 தடுப் பணைகள் கட்டப்பட்டன. இந் நிலையில் ஆந்திராவின் குப்பம் பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதில் தடுப்பணைகள் நிரம்பி, உபரி நீர் தமிழகத்தில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பாய்ந்தது.

இந்நிலையில் குப்பம் தொகுதி ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பொறுப்பாளர் பரத் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கூறும்போது, “பாலாற்றிலிருந்து தண்ணீர் வீணாக தமிழகத்துக்கு சென்று விடுகிறது. இதனை தடுத்து, விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பாசன மற்றும் குடிநீர் வழங்க வழி செய்யப்படும். மேலும் 0.6 டிஎம்சி தண்ணீர் தேக்கும் அளவுக்கு பாலாற்றின் குறுக்கே அணை கட்ட முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் ஒப்புக்கொண்டதால், விரைவில் இதற்கான பணி தொடங்கப்படும்’’ என்றனர்.
 

தலைப்புச்செய்திகள்