Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அமெரிக்காவின் எம்எச்-60ஆர் ரக ஹெலிகாப்டர்கள்: இந்தியா வாங்கியது

ஜுலை 17, 2021 04:41

அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய 2 எம்எச்-60ஆர் ரக ஹெலிகாப்டர்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. அனைத்து காலநிலைகளிலும் பயன்படுத்தக்கூடிய, இந்த எம்எச்-60ஆர் ஹெலிகாப்டர்களை, அமெரிக்காவின் லாக்கீட் மார்டின் கார்பரேஷன் நவீன ஏவியானிக்ஸ் மற்றும் சென்சார் கருவிகளுடன் தயாரித்துள்ளது. அமெரிக்காவிடமிருந்து ராணுவ தளவாட விற்பனை திட்டத்தின் கீழ் 24, எம்எச்-60ஆர் ரக ஹெலிகாப்டர்களை இந்தியா வாங்குகிறது.

அமெரிக்க கடற்படையிடம் இருந்து, 2 எம்எச்-60 ஆர் ரக ஹெலிகாப்டர்களை இந்திய கடற்படை பெற்றுக் கொண்டது. இதற்கான விழா அமெரிக்காவின் சான் டியாகோ நார்த் ஐலேண்ட் கடற்படை தளத்தில் நடந்தது. அப்போது இந்த ஹெலிகாப்டர்கள் அமெரிக்க கடற்படையிடம் இருந்து இந்தியக் கடற்படைக்கு முறைப்படி மாற்றப்பட்டது.

இவற்றை அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சாந்து பெற்றுக் கொண்டார். இதில் ஹெலிகாப்டர்களுக்கான ஆவணங்களை அமெரிக்க கடற்படையின் வைஸ் அட்மிரல் கென்னத் ஒயிட்செல், இந்திய கடற்படையின் துணைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவ்னீத் சிங் ஆகியோர் பகிர்ந்து கொண்டனர்.

இந்த ஹெலிகாப்டர்கள், இந்தியாவுக்கு தேவையான தனிச்சிறப்பான சாதனங்கள் மற்றும் ஆயுதங்களுடன் மாற்றியமைக்கப்படுகின்றன. இந்த ஹெலிகாப்டர்கள், இந்திய கடற்படையின் முப்பரிமாண திறனை அதிகரிக்கும். இந்த ஆற்றல் மிக்க ஹெலிகாப்டர்களை இயக்குவதற்காக, இந்திய கடற்படை குழுவினர் அமெரிக்காவில் தற்போது பயிற்சி பெற்று வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்