Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சித்துவுக்கு தலைவர் பதவி; அம்ரீந்தர் சிங் கடும் எதிர்ப்பு: சோனியாவுக்கு கடிதம்

ஜுலை 17, 2021 04:42

பஞ்சாப்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக சித்து நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்ரீந்தர் சிங் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் அம்மாநில காங்கிரஸில் உட்கட்சிப் பூசல் வலுத்துள்ளது. பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்குக்கு எதிராக முன்னாள் கிரிக்கெட் வீரரும் முன்னாள் அமைச்சருமான நவ்ஜோத் சிங் போர்க்கொடி துாக்கியுள்ளார். சித்துவுக்கு ஆதரவாக சில காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்கள் சிலர் செயல்பட்டு வருகின்றனர்.

பஞ்சாப் அரசு மின்வெட்டு பிரச்சினையை சரிவர கையாளவில்லை என சொந்த கட்சி மீதே சித்து சேற்றை வாரி இறைத்து வருகிறார். இதனால் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியில் கடும் கோஷ்டி மோதல் நடந்து வருகிறது. இதனால் கட்சித் தலைமைக்கும் தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டுள்ளது.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் உட்கட்சி மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கட்சித் தலைவர் சோனியாகாந்தி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

பஞ்சாப் காங்கிரஸில் நிலவும் உள்கட்சி மோதலைத் தீர்ப்பதற்காக மூன்று பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இக்குழு, மாநிலத்தில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அம்ரீந்தர் சிங், சித்து ஆகியோரை சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து அந்த அறிக்கையை சமர்ப்பித்தது. அந்தக் குழுவிடம் பல்வேறு புகார்களை தெரிவித்து இருந்தநிலையில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை நேரில் சந்தித்து பேசினார்.

இந்நிலையில் பஞ்சாப் காங்கிரஸ் கட்சியில் நிலவி வரும் பிரச்சினைக்கு தீர்வு காண கட்சி மேலிடம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக சித்து நியமிக்கப்படவுள்ளார். அதேசமயம் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அமரீந்தர் சிங் முன்னிறுத்தப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

இதுமட்டுமின்றி அமரீந்தர் சிங் ஆதரவாளர்கள் உட்பட இருவர் காங்கிரஸ் செயல் தலைவாக நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே சித்துக்கு தலைவர் பதவி வழங்கப்படும் என தகவல் வெளியான நிலையில் முதல்வர் அம்ரீந்தர் சிங் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதேசமயம் சித்துவும் அதிருப்தி எம்எல்ஏக்கள் 6 பேருடன் தனியாக ஆலோசனை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சித்து நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது உட்கட்சி மோதலுக்கு தீர்வு காணும் விதமாக சோனியா காந்தி ஆலோசனை மேற்கொண்டதாக தெரிகிறது. இதனால் அம்ரீந்தர் சிங் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். சோனியா காந்திக்கு கடிதம் அவர் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த கடிதத்தில் ‘‘பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியில் மாற்றங்கள் செய்ய வேண்டாம். இது கட்சியின் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதன் மூலம் பஞ்சாப் அரசியலில் பிளவு ஏற்படுத்த காங்கிரஸ் தலைமை எண்ணுகிறதா என்ற கருத்து உருவாகி வருகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சியின் வெற்றியை பாதிக்க கூடும். கட்சியில் உள்ள மற்ற தலைவர்களையும் சோர்வடையச் செய்யும்’’ எனக் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்