Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோயம்பேடு மேம்பாலம் அடுத்த மாதம் திறப்பு: நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தகவல்

ஜுலை 18, 2021 11:36

சென்னை கோயம்பேடு நூறடி சாலை - காளியம்மன் கோயில் சாலை, புறநகர் பேருந்து நிலைய நுழைவாயில் சந்திப்புகளை இணைக்கும் வகையில் கட்டப்படும் மேம்பாலப் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த மாதம் மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட உள்ள நிலையில், எஞ்சியுள்ள பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.படம்: பு.க.பிரவீன்

கோயம்பேடு நூறடி சாலையில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலம் அடுத்த மாதம் திறக்கப்படும் என்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் கோயம்பேடு நூறடி சாலை - காளியம்மன் கோயில் சாலை சந்திப்பில் வாகனங்கள் அதிக அளவில் செல்வதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதற்கு தீர்வு காணும் வகையில், நூறடி சாலை- காளியம்மன் கோயில் சாலை, புறநகர் பேருந்து நிலைய நுழைவாயில் சந்திப்புகளை இணைத்து, மேம்பாலம் கட்ட நெடுஞ்சாலைத் துறை முடிவெடுத்தது. ரூ.94 கோடியில் கட்டுமானப் பணிகள் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவருகின்றன.

இதற்கிடையே, கரோனா பரவலால் நிறுத்தப்பட்ட பணிகள், கடந்தஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு பிறகு பணிகள் வேகமெடுத்து தற்போது முடியும் நிலையில் உள்ளது. இதுகுறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கோயம்பேடு நூறடி சாலையில் இருந்து காளியம்மன் கோயில் சாலை, அங்கிருந்து புறநகர் பேருந்து நிலைய நுழைவாயில் பகுதி, அங்கிருந்து மாநில தேர்தல்ஆணையம் வரை என 3 கட்டங்களாக பிரித்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

கரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக பணிகள் நடக்காததால் தாமதம் ஏற்பட்டது. தற்போது, பணி நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளது. எஞ்சியுள்ள சில பணிகளையும் விரைவில் முடித்து, இந்த மேம்பாலம் அடுத்த மாதம்மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும். இதன்மூலம் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
 

தலைப்புச்செய்திகள்