Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மும்பையில் அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

ஜுலை 19, 2021 12:01

மும்பை: மும்பையில் அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. மும்பையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பெய்த பேய் மழையால் நகரமே வெள்ளத்தில் தத்தளித்தது. இதேபோல நவிமும்பை, தானே, பால்கர் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது. 

பல பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதேபோல சாலை, ரெயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதில் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை மட்டும் நகரில் 10 செ.மீ.க்கு மேல் மழை பதிவானது. இடைவிடாமல் பெய்த இந்த மழையே வெள்ளப்பெருக்கிற்கு காரணமாக அமைந்தது.

இதேபோல நேற்று காலை 8.30 நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் மும்பை புறநகரில் 23.5 செ.மீ. மழையும், நகர்பகுதியில் 19.7 செ.மீ. மழையும் பதிவாகி இருந்தது. தாராவி நேதாஜி சொசைட்டி பகுதியில் சாலையில் மழை வெள்ளம் தேங்கி கிடக்கும் காட்சி.

இந்தநிலையில் அடுத்த 5 நாட்களுக்கு மும்பையில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக நகருக்கு அடுத்த 5 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பலத்த மழை பெய்தாலும் அதை எதிர்கொள்ள மும்பை மாநகராட்சி, நிர்வாகம் முழுவீச்சில் 24 மணி நேரமும் தயாராக இருக்க வேண்டும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்