Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முன்னாள் கேப்டன் கங்குலி சாதனையை தவான் முறியடித்தார்

ஜுலை 20, 2021 10:49

கொழும்பு: ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டங்களில் விளையாடுவதற்காக இலங்கை சென்று உள்ளது. கொழும்பில் நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 80 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதலில் விளையாடிய இலங்கை 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 263 ரன் எடுத்தது. ‌ஷமீகா கருணா ரத்னே அதிகபட்சமாக 43 ரன் எடுத்தார். தீபக் சாகர், சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள். பின்னர் விளையாடிய இந்தியா 36.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 264 ரன் எடுத்தது.

கேப்டன் தவான் 95 பந்துகளில் 86 ரன்னும் (6 பவுண்டரி, 1 சிக்சர்), இஷான் கி‌ஷன் 42 பந்தில் 59 ரன்னும் (8 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். இந்த ஆட்டத்தில் 23 ரன்கள் எடுத்த போது தவான் ஒருநாள் போட்டியில் 6 ஆயிரம் ரன்னை தொட்டார். இந்த ரன்னை அதிவேகத்தில் கடந்த 2-வது இந்தியர் என்ற சாதனையை பெற்றார். அவர் 140 இன்னிங்சில் 17 சதம், 33 அரை சதம் உள்பட 6063 ரன் எடுத்துள்ளார்.

கங்குலியின் சாதனையை தவான் முறியடித்தார். கங்குலி 147 இன்னிங்சில் 6 ஆயிரம் ரன்னை கடந்து இருந்தார். விராட் கோலி 136 இன்னிங்சில் 6 ஆயிரம் ரன்னை எடுத்து முதல் இடத்தில் உள்ளார். சர்வதேச அளவில் 6 ஆயிரம் ரன்னை அதிவேகத்தில் எடுத்த வீரர்களில் தவான் 4-வது இடத்தில் உள்ளார்.

ஒருநாள் போட்டியில் 6 ஆயிரம் ரன்களை எடுத்த 10-வது இந்திய வீரர் தவான் ஆவார். தெண்டுல்கர் (18,426 ரன்), விராட்கோலி (12,169), கங்குலி (11,221), ராகுல் டிராவிட் (10,768), டோனி (10,599), அசாருதீன் (9,378), ரோகித்சர்மா (9,205), யுவராஜ்சிங் (8,609), ஷேவாக் (7,995) ஆகியோரது வரிசையில் தவான் இணைந்தார்.

இஷான் கி‌ஷன் தனது அறிமுக போட்டியிலேயே அசத்தினார். முதல் போட்டியிலேயே அதிவேகத்தில் அரை சதம் அடித்த 2-வது வீரர் என்ற சாதனையை அவர் பெற்றார். அவர் 33 பந்தில் அரை சதத்தை தொட்டார். குணால் பாண்ட்டியா அறிமுக போட்டியில் 26 பந்தில் அரை சதம் எடுத்து சாதனை படைத்து இருந்தார். 
 

தலைப்புச்செய்திகள்