Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கரோனாவுக்கு பயந்து ஓராண்டாக வீட்டில் முடங்கிய குடும்பம்: போலீஸார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்

ஜுலை 21, 2021 11:22

கோதாவரி: ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜோலு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சீனுவாசுலு (35). இவருக்கு மனைவி, ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனாபரவத் தொடங்கியது. அப்போது முதல் சீனுவாசுலுவின் குடும்பத்தினர் கரோனாவுக்கு பயந்து வீட்டிலேயே தங்கிவிட்டனர்.

வாரத்துக்கு ஒரு முறை 10 வயதுமகன் மட்டும் வெளியே வந்து தேவையான பொருட்களை அவர்களது ஊரிலேயே வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்று விடுவான். மீண்டும் கதவு அடைக்கப்பட்டுவிடும். இதனிடையே, இவர்களுக்கு அரசு சார்பில் வீட்டுமனைப்பட்டா ஒதுக்கப்பட்டது. இதற்கான தகவலை தெரிவிக்க தாசில்தார் அலுவலக ஊழியர்கள் வீட்டுக்கு சென்றனர். நீண்ட நேரமாக வீட்டின் கதவை தட்டியும் யாரும் திறக்கவில்லை.

கரோனாவுக்கு பயந்து வீட்டைவிட்டு யாரும் வெளியே வருவதில்லை என கிராமத்தினர் தெரிவித்ததால், வருவாய் துறை ஊழியர்கள், ராஜோலு போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீஸார் வந்து வீட்டின்கதவை தட்டினர். வாசலில் நின்று எவ்வளவோ எடுத்துக்கூறியும் குடும்பத்தினர் கதவை திறக்கவில்லை.

வேறு வழியின்றி போலீஸார் கதவை உடைத்து வீட்டிற்குள் சென்றனர். அங்கு அனைவரும் உடல்மெலிந்து ஒருவித பீதியில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 5 பேரையும் மீட்ட போலீஸார், அவர்களை காக்கிநாடா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்