Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சிங்கப்பூரில் வேலை; வாலிபரை ஏமாற்றி ரூ.32 ஆயிரம் மோசடி செய்தவர் கைது

ஜுலை 22, 2021 01:29

கோவை:  சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி கோவை வாலிபரிடம் ரூ.32,000 மோசடி செய்தவரை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது; கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் வயது 33, என்பவர் வெளிநாட்டு வேலை தொடர்பாக சமூக வலைத்தளத்தில் தேடி உள்ளார். அப்போது தினேஷ் என்பவரின் செல்போன் எண் கிடைத்தது. அந்த செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் சிங்கப்பூரில் வேலை உள்ளது. அதற்கு மருத்துவச் சான்று அவசியம் என்று தெரிவித்துள்ளார். 

இதையடுத்து முத்துக்குமார் மருத்துவச் சான்று தயார் செய்துவிட்டு தினேஷை தொடர்பு கொண்டார். அப்போது அவர் சிங்கப்பூர் செல்ல வேண்டுமென்றால் விமான பயண கட்டணம் ரூ. 5,000, விசா கட்டணம் ரூ.27,633 செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

கட்டண தொகையை முத்துக்குமார் ஆன்லைன் மூலமாக அவருக்கு அனுப்பி உள்ளார். பணத்தை எடுத்துக் கொண்டவர் செல்லை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் என்பதை அறிந்த முத்துக்குமார் ஆன்லைன் மூலம் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய தேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். 

இந்நிலையில் தினேஷ் சென்னையில் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் சென்னை சென்று தினேசை கைது செய்தனர். முதற் கட்ட விசாரணையில் அவர் சொந்த ஊர் சேலம் மாவட்டம் கண்ணன்குறிச்சி என்பது தெரியவந்துள்ளது. 

இதேபோல் பல பேரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி உள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் பல்வேறு அவர் குறித்த விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்