Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மருத்துவர் சைமன் உடலைத் தோண்டி எடுக்க ஆட்சேபனை இல்லை: வழக்கை வாபஸ் பெற்றது சென்னை மாநகராட்சி

ஜுலை 23, 2021 05:06

சென்னை: கரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவர் ஹெர்குலஸ் சைமன் உடலை வேலங்காடு இடுகாட்டிலிருந்து தோண்டி எடுத்து, கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய வேண்டுமென்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கை சென்னை மாநகராட்சி வாபஸ் பெற்றுள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்பால் மரணமடைந்த நரம்பியல் மருத்துவர் ஹெர்குலஸ் சைமன் உடலைக் கடந்த ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யச் சென்றபோது பொதுமக்களின் எதிர்ப்பால், வேலங்காடு இடுகாட்டில் சென்னை மாநகராட்சி அடக்கம் செய்தது.

இந்நிலையில், வேலங்காட்டிலிருந்து கணவரின் உடலைத் தோண்டி எடுத்து, கிறிஸ்தவ முறைப்படி கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யக் கோரி மனைவி ஆனந்தி, சென்னை மாநகராட்சியிடம் கோரிக்கை மனு கொடுத்தார். அதைப் பரிசீலித்த சென்னை மாநகராட்சி ஆணையர் அந்தக் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ஆனந்தி சைமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் தீர்ப்பளித்த நீதிபதி, வேலங்காடு மயானத்திலிருந்து தோண்டி எடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை மாநகராட்சி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், கரோனா வைரஸ் தொற்றினால் இறந்தவரின் உடலைத் தோண்டி எடுத்து ஒரு சுடுகாட்டில் இருந்து மற்றொரு சுடுகாட்டில் அடக்கம் செய்வது என்பது சாத்தியமில்லாதது. எனவே, தனி நீதிபதி உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வு தனி நீதிபதியின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்திருந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.என்.மஞ்சுளா அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகராட்சி சார்பில் தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டது

வழக்கை வாபஸ் பெற அனுமதியளித்த நீதிபதிகள், மாநகராட்சியின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். வழக்கை வாபஸ் பெற்றதன் மூலம், மருத்துவர் ஹெர்குலஸ் சைமன் உடலை வேலங்காடு இடுகாட்டிலிருந்து தோண்டி எடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யும் பணிகளை சென்னை மாநகராட்சி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்