Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

ஜுலை 24, 2021 11:11


சென்னை: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய ஐந்து மாவட்டங்களில், இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, அந்த மையத்தின் இயக்குனர் புவியரசன் நேற்று வெளியிட்ட அறிக்கை:தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நீலகிரி கோவை மாவட்டங்களில் பல இடங்களில் கன மழை பெய்து வருகிறது.நேற்று காலை 8:30 மணி வரையிலான, 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 16; நடுவட்டத்தில் 14; மேல் பவானியில் 13 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. கோவை, தேனி, கன்னியாகுமரி, பெரம்பலுார், சேலம், திருநெல்வேலி, சென்னை மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது.

நீலகிரி, கோவையில் இன்றும் கன மழை தொடரும். மீட்பு பணிகளில் பேரிடர் மீட்புக் குழுவினர் 130 பேர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றுள்ளனர். தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோல, வடகடலோர மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது; மற்ற இடங்களில் வறண்ட வானிலையே காணப்படும்.

சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன்இருக்கும். ஒரு சில இடங்களில், லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, ஆந்திர கடலோரம், தெற்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளில் கடலுக்கு செல்ல வேண்டாம் என, எச்சரிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்