Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மகாராஷ்டிராவில் தொடரும் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 136 பேர் பலி

ஜுலை 24, 2021 11:52

மும்பை: மகாராஷ்டிராவில் கொட்டித் தீர்க்கும் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 136 பேர் உயிரிழந்ததாக அம்மாநில பேரிடர் மீட்பு பணித்துறை அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கொங்கன் மண்டலத்தில் உள்ள ராய்காட் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக இடைவிடாது பெய்த கனமழையால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

ராய்காட் மாவட்டம், மகாத் பகுதியில் பெய்ந்த கனமழையால் மலைப்பகுதியான தெலி கிராமத்தில் நேற்று இரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் அந்த கிராமத்தில் உள்ள ஏராளமான வீடுகளும், அதில் குடியிருந்தவர்களும் மண்ணில் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மண்ணில் புதையுண்டவர்களில் 36 பேரின் உடல்கள் முதல்கட்டமாக மீட்கப்பட்டன. கடற்படையின் இரு குழுக்கள், மாநில மீட்புப் படையின் 12 குழுக்கள், கடலோரப் படையின் 2 குழுக்கள், தேசிய பேரிடர் மீட்புப்படை சார்பில் 3 குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கிருந்து தொடர்ந்து உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே மாநிலம் முழுவதும் மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 136 பேர் உயிரிழந்ததாக மகாராஷ்டிர மாநில பேரிடர் மீட்பு பணித்துறை அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். அதுபோலவே மழை, வெள்ளத்தில் சிக்கிய ஒரு லட்சம் பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு தொடர்ந்து மீட்புக்குழுவினர் அனுப்பட்டு வருகின்றனர். மழை, வெள்ளத்தால் சாலைகளும் சேதமடைந்து போக்குவரத்தும் முடங்கியுள்ளது.

தலைப்புச்செய்திகள்