Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிமுகவை அழித்துவிடலாம் என்ற திமுகவின் பகல் கனவு பலிக்காது: ஆர்.பி. உதயகுமார் உறுதி

ஜுலை 25, 2021 06:09

மதுரை: அதிமுகவை அழித்துவிடலாம் என்ற பகல் கனவு பலிக்காது என, முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருமங்கலம் அம்மா கோயிலில் நடைபெற்றது. அவைத் தலைவர் அய்யப்பன் எம்எல்ஏ தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:

தற்போது திமுக திசைமாறுகிறது. அரசுக்கு கடிவாளம் போடும் வகையில், நிர்வாக சீர்கேட்டை தோலுரித்துக் காட்டும் வகையில், 28-ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் இல்லங்கள் முன்பு கண்டன பதாகைகளை ஏந்தி, நாம் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

மேற்கு மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் தங்களது இல்லங்கள் முன்பு உரிமைக்குரல் எழுப்பி, கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும். விடியலை தருவோம் எனக்கூறிய திமுக மக்களை வஞ்சித்துவிட்டது.

ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம். அத்தேர்வை ரத்து செய்யும் சூத்திரம் எங்களுக்குத் தெரியும் என, சத்தியம் செய்தனர். ஆனால், வாக்களித்த மக்களை வஞ்சித்துள்ளனர்.

பெண்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கும் திட்டம் என்னவாயிற்று? கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி நாணயத்துடன் திமுக அரசு நடந்து கொள்ள வேண்டும். திமுகவின் அலட்சியத்தால் கிராமங்களில் விவசாயிகள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்படும் சூழல் உள்ளது.

தற்போது அதிமுக தொண்டர்கள் மீதும், உழைப்போர் மீதும், நிர்வாகிகள் மீதும் பொய் வழக்கு போட்டு மலிவான அரசியலை திமுக செய்கிறது. அதிமுகவை அழித்துவிடலாம் என்ற திமுகவின் பகல் கனவு பலிக்காது.

அதிமுகவை சேதப்படுத்த நினைக்கும் திமுகவுக்கு தோல்வியே கிடைக்கும். முதலில் உரிமைப் போராட்டம். தீர்வு காணாவிட்டால் மக்களை திரட்டி போராடும். லாட்டரியை கொண்டு வந்தால், கள்ள லாட்டரியும் வந்துவிடும். சாமானிய மக்கள் பாதிக்கப்படுவர்.

நாம் ஆளுங்கட்சியாக இருந்தபோது, அரசின் சாதனை திட்டங்களை மக்களிடம் கூறினோம். எதிர்க்கட்சியாக இருக்கும்போது, திமுக அரசின் நிர்வாகக் குளறுபடி, ஏமாற்று நாடகத்தை மக்களிடத்தில் எடுத்துச் செல்ல வேண்டும்".

இவ்வாறு அவர் பேசினார்.

தலைப்புச்செய்திகள்