Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: நாடாளுமன்றத்தை நோக்கி டிராக்டர் ஓட்டிச் சென்ற ராகுல் காந்தி

ஜுலை 26, 2021 01:30

புதுடெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பார்லிமென்ட் நோக்கி காங்., எம்.பி., ராகுல் டிராக்டர் ஓட்டிச் சென்றார். அப்போது, வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் உரிமைகள் பறிக்கப்படுவதாகவும், இச்சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் ராகுல் கூறினார்.

மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை ரத்து செய்யக்கோரியும் கடந்த 8 மாதங்களாக டில்லியின் பல எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தும் நோக்கில் பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் முடியும் வரையில், தினமும் 200 பேர் வீதம் பார்லிமென்ட் முன்பாக போராட முடிவு செய்தனர். இதன்படி, தொடர்ந்து போராடி வருகின்றனர்.

விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் உள்ளிட்ட காங்., எம்.பி.,க்களும் பார்லி., வளாகத்தில் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், இன்று (ஜூலை 26) வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளுடன் பார்லிமென்ட் நோக்கி ராகுல், டிராக்டர் ஓட்டிச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டார்.
டிராக்டரை ஓட்டி வந்த ராகுல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

விவசாயிகளின் பிரச்னையை பார்லிமென்டிற்கு கொண்டு வந்துள்ளேன். அவர்கள் (மத்திய அரசு) விவசாயிகளின் குரல்களை அடக்குகிறார்கள். இது குறித்து, பார்லி.,யில் ஒரு விவாதம் கூட நடக்க விடவில்லை. மத்திய அரசு இந்த கருப்பு சட்டங்களை (வேளாண் சட்டங்களை) ரத்து செய்ய வேண்டும். இந்த சட்டங்கள் 2-3 பெரிய வணிகர்களுக்கு சாதகமாக இருப்பது நாட்டிற்கே தெரியும். ஆனால், வேளாண் சட்டத்தால் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், எதிர்ப்பவர்கள் பயங்கரவாதிகள் எனவும் மத்திய அரசு கூறுகிறது. உண்மையில், இச்சட்டங்களால் விவசாயிகளின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்