Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம்: விசாரணை ஆணையம் அமைத்தார் மம்தா

ஜுலை 26, 2021 05:09

கோல்கத்தா: பெகாசஸ் ஸ்பைவேர் மூலமாக முக்கிய நபர்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் விசாரணை ஆணையம் அமைத்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் இந்தியாவில் முக்கிய நபர்களின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. பார்லியில் கடந்த ஒரு வாரமாக இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நாட்டிலேயே முதன்முறையாக பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக விசாரிக்க விசாரணை ஆணையத்தை அமைத்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து மம்தா கூறியதாவது: பெகாசஸ் ஒட்டுக்கேட்பு மென்பொருள் மூலம், நீதித்துறையைச் சேர்ந்தவர்கள், அரசியல் தலைவர்கள், மிக உயர்ந்த பொறுப்புகளில் இருப்போர்கூட கண்காணிக்கப்பட்டுள்ளனர். உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் இந்த பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விசாரணை அமைக்க பார்லி கூட்டத்தொடரில் மத்திய அரசு உத்தரவிடும் என எதிர்பார்த்தோம். ஆனால், அது நடக்கவில்லை, மத்திய அரசு அமைதியாக உட்கார்ந்திருக்கிறது. எனவே, பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விசாரிக்க விசாரணை ஆணையத்தை நாட்டிலேயே முதல் மாநிலமாக மேற்குவங்கம் அமைத்துள்ளது. இது சின்ன முயற்சிதான், இதைப் பார்த்து மற்ற மாநிலங்கள் விழித்துக்கொள்ளட்டும்.

இந்த ஆணையம் விரைவாக விசாரணையைத் தொடங்க வேண்டும், மே.வங்கத்தில் ஏராளமானோரின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டிருக்கலாம். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி லோக்கூர், கோல்கட்டா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜோதிர்மயி பட்டாச்சார்யா ஆகியோர் தலைமையில் ஆணையம் செயல்படும். இந்த ஆணையம் சட்டவிரோத ஹேக்கிங், கண்காணித்தல், உளவு பார்த்தல், செல்போன் அழைப்புகளை பதிவு செய்தல் தொடர்பாக விசாரிக்கும். விசாரணைச் சட்டம் 1952ன் கீழ் இந்த ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்