Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை வழங்க பிரதமரிடம் வலியுறுத்தினோம்: எடப்பாடி பழனிசாமி விளக்கம்

ஜுலை 26, 2021 05:15

புதுடெல்லி: பிரதமர் மோடியுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி நேரில் சந்தித்தனர். இச்சந்திப்பின்போது மேகதாது அணை, தடுப்பூசி வழங்குவது தொடர்பாக பிரதமரிடம் வலியுறுத்தினோம் என பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டசபை தேர்தலுக்கு பின், பிரதமர் மோடியை சந்தித்து பேச அனுமதி கேட்டு, பன்னீர்செல்வமும், பழனிசாமியும் தனித்தனியாக கடிதங்கள் அனுப்பியும் அனுமதி தரப்படவில்லை. தற்போது, அவர்கள் சந்திப்பதற்கு அனுமதி தரப்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்று (ஜூலை 25) காலை பன்னீர்செல்வமும், நேற்றிரவு பழனிசாமியும் டெல்லி புறப்பட்டு சென்றனர். இவர்களுடன், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, தளவாய்சுந்தரம் உள்ளிட்டோரும் டெல்லி சென்றனர்.

இன்று (ஜூலை 26) காலை 11 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்த இருவரும் ஆலோசனையில் ஈடுபட்டனர். சந்திப்பிற்கு பிறகு, முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சட்டசபைத் தேர்தலில் பிரசாரம் செய்ததற்காக பிரதமரிடம் நன்றி தெரிவித்தோம். தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை வழங்க பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினோம். மேகதாது அணையை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி தரக்கூடாது என்றும் பிரதமரிடம் கூறினோம்.

நீர்ப்பற்றாக்குறையை போக்க காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த கோரினோம். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தினோம். ஆட்சியில் இல்லாவிட்டாலும் தமிழக மக்களின் நன்மைக்காக தொடர்ந்து பாடுபடும் கட்சி அதிமுக. திமுக அரசு தமிழகத்தில் லாட்டரி சீட்டை கொண்டுவராவிட்டால் நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்