Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு குறித்து இந்திய அரசு கண்டுகொள்ளவில்லை : சிதம்பரம் விமர்சனம்

ஜுலை 26, 2021 05:19

புதுடெல்லி: பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரத்தைப் பற்றிக் கவலைப்படாத ஒரே அரசு இந்தியாதான் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

இஸ்ரேலின் என்.எஸ்.ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் பார்லி.,யில் எழுப்பி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இந்த விவகாரத்தில் எந்தவிதமான ஒட்டுக்கேட்பும் நடக்கவில்லை, யாருடைய செல்போனும் கண்காணிக்கப்படவில்லை என்று மத்திய அரசு மறுக்கிறது. அதேநேரத்தில் பெகாசஸ் விவகாரத்தை இஸ்ரேல் அரசு தீவிரமாக எடுத்து விசாரித்து வருவதாக இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதிஅமைச்சருமான ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் பதிவிட்டதாவது: பிரான்ஸ் அதிபர் மெக்ரான், இஸ்ரேல் பிரதமர் பென்னட்டை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, பெகாசஸ் உளவு செயலி குறித்த முழு விவரங்களையும் கேட்டுள்ளார். பிரான்சில் செல்போன்கள், குறிப்பாக அதிபரின் செல்போன் ஹேக் செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக் குறித்தும் பேசியுள்ளார். அதற்கு இஸ்ரேலிய பிரதமர், இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு விரைவில் தெரிவிக்கிறேன் என உறுதியளித்துள்ளார்.

ஆனால், பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் குறித்து கவலைப்படாத ஒரே அரசு இந்தியாவில்தான் இருக்கிறது. ஏனென்றால், ஒட்டுக்கேட்பு குறித்த முழுமையான தகவல்களையும் மத்திய அரசுஅறிந்துள்ளதால், வேறு எந்தத் தகவலையும் இஸ்ரேலிடமும், என்எஸ்ஓ அமைப்பிடமும் கேட்கத் தேவையில்லை என்று எண்ணுகிறதா. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்