Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தெய்வ பக்தி, தேச பக்தியை பரப்பியவர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்: ஆளுநர் புகழாராம்

ஜுலை 27, 2021 12:25

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் உள்ள மஹா பெரியவர் மணிமண்டபத்தில் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதியாக இருந்து மறைந்த ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 87-வது ஜெயந்தி விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு காணொலிக் காட்சி மூலம் பங்கேற்றார். தமிழக ஆளுநர் பான்வாரிலால் புரோஹித் நேரில் பங்கேற்றார்.

இந்த விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசும்போது, "ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் காலநிலைகளை பாராமல் இந்தியா முழுவதும் பயணித்து நித்ய பூஜைகளை செய்ததுடன் பக்தியை பரப்பி, பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். சிறந்த கல்விக் கூடங்களையும், மருத்துவமனைகளையும் நிறுவினார். இவர் அனைத்து தரப்பு மக்களிடமும் தேவையான தேச பக்தியையும்,தெய்வ பக்தியையும் பரப்பினார்.லட்சக் கணக்கான மக்களின் மனங்களை தனது தெய்வீகத்தின் மூலம்கவர்ந்தார். தொடர்ந்து சங்கர மடம் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும், மக்களும் மடத்துக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்" என்றார்.

இந்த நிகழ்ச்சியில் சங்கர மடத்தின் மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசும்போது, "1947-ம் ஆண்டுக்கு முன்பே ஒருங்கிணைந்த பாரத தேசம் உருவாகும் என்று கூறியவர் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவர் இந்தியா முழுவதும் மக்களிடம் தர்மம், பயபக்தி, தேச பக்தி ஆகியவற்றை பரப்பினார். ‘வியட்நாம், கம்போடியா தேசங்களில் இந்துக் கோயில்கள்’ என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது. இதை திருப்பதியில் ஏற்கெனவே ஆங்கிலத்தில் வெளியிடும்போது ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்று வெளியிட்டார்" என்றார்.

பின்னர் ஆளுநர் சங்கர மடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோரின் பிருந்தாவனங்களை தரிசித்தார். பின்னர் காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் மணி மண்டபத்தில் நடந்த விழாவில் பங்கேற்றார்.இந்த விழாவில் ஆந்திரப் பிரதேச முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எழுதிய, ‘வியட்நாம், கம்போடியா தேசங்களில் இந்துக் கோயில்கள்' எனும் தெலுங்கு நூல் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சங்கர மடத்தின் மருத்துவப் பணிகளுக்காகதமிழக ஆளுநர் பன்வாரிலால்புரோஹித் ரூ.1 கோடி நிதியுதவியை வழங்கினார். நலிவுற்றபொதுமக்கள், கலைஞர்களுக்குசங்கர மடம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தலைப்புச்செய்திகள்