Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கர்நாடக புதிய முதல்வர் யார்?- எம்எல்ஏக்களுடன் மேலிட தலைவர்கள் இன்று ஆலோசனை 

ஜுலை 27, 2021 03:17

கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா விலகியுள்ள நிலையில் புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. இதில் பாஜக மேலிட பார்வையாளர்களாக மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், கிஷண் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

கடந்த இரு ஆண்டுகளாக கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக ஆளும் பாஜகவினரே கருத்துகள் கூறி வந்தனர். அத்துடன் எடியூரப்பாவுக்கு 78 வயது ஆகிவிட்டதால் முதல்வர் பதவியில் இருந்து மாற்றவேண்டும் எனவும் பாஜக எம்எல்ஏக்களிடம் கையெழுத்து பெற்று மேலிடத்துக்கு அனுப்பினர்.

எடியூரப்பா அண்மையில் தனது மகன் விஜயேந்திராவுடன் அவசரமாக டெல்லி சென்றார். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது எடியூரப்பா பதவி விலக தயாராக இருப்பதாக கூறினார். கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்று நேற்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக நேற்று அவர் அறிவித்தார்.

பின்னர் அவர் கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். இதனை ஏற்றுக் கொண்ட ஆளுநர் அடுத்த முதல்வர் பதவியேற்கும் வரை இடைக்கால முதல்வராக தொடரும்படி கேட்டுக் கொண்டார். கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா விலகியுள்ள நிலையில் புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான ஆலோசனையை பாஜக தலைமை தொடங்கியுள்ளது. கர்நாடக மாநில பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை பெங்களூருவில் நடைபெறுகிறது.

இதில் பாஜக மேலிட பார்வையாளர்களாக மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், கிஷண் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். பொதுச்செயலாளர் அருண் சிங் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகளும் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் புதிய முதல்வராக யாரை தேர்வு செய்யலாம் என்பது பற்றி எம்எல்ஏக்களிடம் கருத்துக் கேட்கின்றனர்.

தலைப்புச்செய்திகள்