Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காங்கிரஸ் புதிய தலைவர் அழகிரி - ப.சிதம்பரம், இளங்கோவனிடம் வாழ்த்து பெற்றார்

பிப்ரவரி 03, 2019 10:32

சென்னை: தமிழக காங்கிரஸ் புதிய தலைவராக கே.எஸ். அழகிரி நியமிக்கப்பட்டுள்ளார். தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதையடுத்து கட்சியில் முக்கிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். 

ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளரான அழகிரி, முதலில் இன்று காலையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள ப.சிதம்பரம் வீ ட்டுக்கு வந்தார். அங்கு ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் இருவருக்கும் சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் அழகிரிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதே போல் செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள விஷ்ணு பிரசாத்தும் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்திடம் வாழ்த்து பெற்றார். 
இதில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர். ராமசாமி, கட்சியின் மாநில நிர்வாகிகள் கோபண்ணா, ஜோதி, தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன், பொருளாளர் தி.நகர் ஸ்ரீராம், விஜய் இளஞ்செழியன், விக்டரி ஜெயக்குமார், பொன் கிருஷ்ணமூர்த்தி, பட்டுக்கோட்டை ராஜேந்திரன், விருகை ராமச்சந்திரன், சோமசுந்தரம், இளங்குமரன், சசிகுமார், டில்லிபாபு, ரஞ்சன்குமார், கராத்தே செல்வம் ஜோர்தான் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

பின்னர் மணப்பாக்கத்தில் உள்ள இளங்கோவன் வீட்டுக்கு அழகிரி சென்று அவரிடமும் வாழ்த்து பெற்றார். அங்கு இளங்கோவன் ஆதரவு நிர்வாகிகள் திரண்டு நின்று வரவேற்றனர். இதில் ரங்கபாஷ்யம், வி.ஆர்.சிவராமன், சக்கரபாணி ரெட்டியார், புலாம், ஏ.ஜி.சிதம்பரம், பாலமுருகன், நாஞ்சில் பிரசாத், அகரம் கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

பின்னர் அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:- 40 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் எளிய தொண்டனாக இருந்த என்னை இவ்வளவு பெரிய இடத்தில் அமரவைத்த ராகுல் காந்திக்கு நன்றி. இதற்கு உறுதுணையாக இருந்த ப.சிதம்பரம், முகுல் வாஸ்னிக் மற்றும் தமிழகத்தை சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அனைவருக்கும் எனது நன்றி. 

என்னை பொறுத்தவரை காங்கிரசின் கொள்கைகளை பொதுமக்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் கொண்டு செல்வதுதான் எனது முதல் பணி. மோடி அரசும், எடப்பாடி அரசும் இந்திய வளர்ச்சியையும், தமிழகத்தின் வளர்ச்சியையும் பின்னுக்கு தள்ளி விட்டன. அனைவருடைய ஒத்துழைப் போடு தமிழகத்தை மிகச் சிறந்த மாநிலமாக மாற்ற அமைப்பு ரீதியாக காங்கிரசை பலப்படுத்த பாடுபடுவேன். 

நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என்றார் கலைஞர். அதே போல் இப்போது ராகுலை பிரதமர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் முன்மொழிந் திருக்கிறார். அதற்காக அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெற பணியாற்றுவதே எங்கள் கடமை. 

திருநாவுக்கரசர் சிறந்த செயல்வீரர். கடந்த 2 ஆண்டுகளில் அவரும் சிறப்பாக பணியாற்றினார். ராகுலுக்கு நெருக்கமானவர். காங்கிரசில் என்றும் அவருக்கு தனி இடம் உண்டு. அவர் குறைபாட்டின் காரணமாக மாற்றப்படவில்லை. இந்தியா முழுவதும் அமைப்பு ரீதியாக தலைவர் மற்றும் செயல் தலைவர் என்ற பொறுப்புகளை பல மாநிலங்களில் ராஜீவ்காந்தி ஏற்படுத்தி வருகிறார். அதேபோலத்தான் தமிழகத்திலும் ஏற்படுத்தி இருக்கிறார். வேறு எந்த பிரச்சினையும் இல்லை. 

காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டிபூசல் என்பது தவறு. கருத்து வேறுபாடுகள் ஜனநாயக முறையில் செயல்படும் எல்லா கட்சிகளிலும் இருக்கத்தான் செய்யும். அதை கோஷ்டி பூசல் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. எங்களை பொறுத்தவரை கூட்டுத்தலைமை, கூட்டு முயற்சியின் மூலம் சாதிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது என அவர் கூறினார். 
 

தலைப்புச்செய்திகள்