Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டி.ஆர்.பாலுவின் ஆணையினால் அடிக்கடி மோதல்: ராமதாஸ் எச்சரிக்கை

ஏப்ரல் 26, 2019 08:18

சென்னை: சுங்கச்சாவடிகளில் உள்ளூர் ஊர்திகளுக்கான கட்டண உயர்வு குறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை:  ’’தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளுக்கு அருகிலுள்ள ஊர்களில் வாழும் மக்களின் வணிக ஊர்திகளுக்கு வழங்கப்பட்டிருந்த கட்டண சலுகையை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ரத்து செய்துள்ளது. 

இதனால் உள்ளூர் வணிக வாகனங்களுக்கு வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த கட்டண உயர்வு கண்டிக்கத்தக்கது ஆகும். தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 46 சுங்கச்சாவடிகள் உள்ளன. 

இவற்றில் பெரும்பாலான சுங்கச்சாவடிகள் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் நேரடிக் கட்டுப்பாட்டிலும், மீதமுள்ளவை தனியார் நிறுவனங்களின் நிர்வாகத்திலும் உள்ளன. ஒரு வாகனம் சுங்கச் சாலையில் எவ்வளவு தொலைவு பயணம் செய்கிறது என்ற வரையறை இல்லாமல் ஒரு சுங்கச்சாவடியைக் கடந்தாலே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதனால் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள பகுதிகளைச் சேர்ந்த  மக்கள் வைத்துள்ள வணிகம் சார்ந்த மற்றும் வணிகம் சாராத பயன்பாட்டுக்கான வாகனங்களுக்கு  தேவையில்லாமல் அதிக கட்டணம் வசூலிக்கப்படும் நிலை உருவானது. 

இதற்கு அப்பகுதி மக்களிடம் கடுமையான எதிர்ப்பு எழுந்த நிலையில், சுங்கச்சாவடி அமைந்துள்ள இடத்திலிருந்து 20 கிலோ மீட்டர்  சுற்றளவுக்குள் வாழும் மக்களின் வணிகம் சாராத வாகனங்களுக்கு மாதாந்திர அடிப்படையில் குறைந்த கட்டணம் செலுத்தவும், வணிகம் சார்ந்த பயன்பாட்டுக்கான வாகனங்களுக்கு வழக்கமான சுங்கக் கட்டணத்தில் 50% தள்ளுபடி வழங்கலாம் என்றும் 1997-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய  நெடுஞ்சாலைகள் கட்டண விதிகள் உருவாக்கப்பட்டு கடந்த வாரம் வரை நடைமுறையில் இருந்தன.

ஆனால், இப்போது திடீரென அந்த விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு, சுங்கச்சாவடிகளையொட்டி 20 கி.மீ சுற்றளவில் வசிக்கும் மக்களுக்கு சொந்தமான வணிக வாகனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50% கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

இதனால், உள்ளூர் வணிக வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மட்டும் லட்சக்கணக்கான வாகனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சொந்த வேலைக்காக வெளியில் சென்று வரும் வாகனங்களுக்குக் கூட அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் அவற்றின் உரிமையாளர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.

சுங்கச்சாவடியை ஒட்டிய பகுதிகளில் வணிக வாகனங்கள் வைத்திருப்பவர்களில் பெரும்பான்மையினர் அவற்றை வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்துபவர்கள் கிடையாது. சிறிய அளவில் காய்கனி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவற்றை நடத்தும் அவர்கள், அவற்றுக்குத் தேவையான சரக்குகளை கொண்டு வருவதற்காக மட்டுமே வாகனங்களை பயன்படுத்துகின்றனர்.

இதுவரை வழங்கப்பட்டு வந்த சுங்கக்கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டு, இரு மடங்குக் கட்டணம் வசூலிக்கப்படுவதால், கூடுதல் செலவை ஈடு செய்வதற்காக காய்கனி மற்றும் மளிகைப் பொருட்களின் விலைகள் குறிப்பிட்ட விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளன. இது அப்பாவி மக்களின் பொருளாதாரத்தில் பெரும் ஓட்டையை ஏற்படுத்தியுள்ளது.

சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள பகுதிகளைச் சேர்ந்த வாகனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50% கட்டணத் தள்ளுபடி என்பது அவர்களுக்கான சலுகை அல்ல... மாறாக உரிமை ஆகும். அவர்கள் அதிகபட்சமாக சுங்கச்சாலையை ஒரு சில கிலோ மீட்டர் தொலைவுக்கு மட்டுமே பயன்படுத்துவார்கள். 

உள்ளூர்வாசிகள் என்பதால் அந்த சாலைகளை பயன்படுத்துவதற்கான உரிமை அவர்களுக்கு இயற்கையாகவே உண்டு.  அவர்கள் வாழும் பகுதிகளில் சுங்கசாவடிகளை அமைத்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், இப்போது அவர்களே முழுக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறுவது ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனைக் கடித்த கதை தான். இந்நடவடிக்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

உள்ளூர் வாகனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50% கட்டணச் சலுகை ரத்து செய்யப்பட்டதற்கு காரணமே திமுகவைச் சேர்ந்த டி.ஆர்.பாலு மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சராக இருந்த போது 2008&ஆம் ஆண்டில் பிறப்பித்த உத்தரவு தான். 

அவர் தான் உள்ளூர் வணிக வாகனங்களுக்கு வழங்கப் பட்டு 50% கட்டணச் சலுகையை ரத்து செய்து 2008-ஆம் ஆண்டில் ஆணையிட்டார். அப்போது அந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து அந்த நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்தது. அதன்பின் 10 ஆண்டுகள் கழித்து டி.ஆர். பாலுவின் ஆணை இப்போது நடைமுறைக்கு வந்திருக்கிறது.

உள்ளூர் வாகனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த சுங்கக் கட்டணச் சலுகை ரத்து செய்யப்பட்டதால் சுங்கச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது. சென்னையை அடுத்த செங்குன்றம் சுங்கச்சாவடியில் உள்ளூர் மக்களுக்கும், சுங்கச்சாவடி பணியாளர்களுக்கும் இரு நாட்களுக்கு முன் ஏற்பட்ட மோதலில் சுங்கச்சாவடி சூறையாடப்பட்டது. 

கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளூர் மக்கள் என்பதால் இத்தகைய மோதல்கள் அடிக்கடி ஏற்பட்டு சட்டம் - ஒழுங்கு சிக்கலாக மாறக்கூடும். அதைத் தவிர்க்கும் வகையிலும், உள்ளூர் மக்களுக்கு உள்ள உரிமையை நிலைநாட்டும் வகையிலும் உள்ளூர் வாகனங்களுக்கான 50% கட்டணச் சலுகை ரத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.
 

தலைப்புச்செய்திகள்