Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மூதாட்டியிடம் நூதன முறையில் ரூ.2.06 கோடி மோசடி: தலைமறைவாக இருந்த டெல்லி பெண் கைது

ஜுலை 28, 2021 11:32

சென்னை: ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திலிருந்து பேசுவதாகக் கூறி மூதாட்டியிடமிருந்து ரூ.2.06 கோடி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த டெல்லி பெண்ணை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

மந்தைவெளி, திருவீதியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுதா (67). இவரது கணவர் டாக்டர் ஜெ.தரன். இவர் இறந்துவிட்ட நிலையில் அவரது பெயரில் உள்ள ஆயுள் காப்பீடுத் தொகையை பெறும் முயற்சியில் சுதா ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், சுதாவை தொடர்புகொண்ட நபர் ஒருவர், ஆயுள் காப்பீடு நிறுவனத்திலிருந்து பேசுவதாக கூறி, முதிர்ச்சி பெற்ற பணத்தைப் பெற முன் தொகை செலுத்த வேண்டும் என்று நம்பவைத்து நூதன முறையில் பல்வேறு தவணைகளில் ரூ.2 கோடியே 6 லட்சம் பெற்றுள்ளார். ஆனால், பணம் கிடைக்கவில்லை.

இதற்கிடையில் போனில் தொடர்பு கொண்டவரின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்து வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சுதா, கடந்த 2019-ம் ஆண்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்படி மத்திய குற்றப்பிரிவில் உள்ள வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீஸாரின் விசாரணையில், மோசடி கும்பல் டெல்லியில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து டெல்லி விரைந்த தனிப்படை போலீஸார் டெல்லியைச் சேர்ந்த அமன்பிரசாத் (29), அவரது கூட்டாளிகள் பிரதீப் குமார் (29) உட்பட 6 பேரை கைது செய்து சென்னை அழைத்து வந்து புழல் சிறையில் அடைத்தனர். இதில் தலைமறைவாக இருந்த டெல்லி, திலக் நகரைச் சேர்ந்த சிம்ரன்ஜித் சர்மா (29) என்ற பெண்ணை டெல்லி சென்று தனிப்படை போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர்.

போலீஸாரின் விசாரணையில் சிம்ரன்ஜித் சர்மா டெல்லியில் உள்ள கேளிக்கை விடுதியில் வேலை செய்தபோது மோசடி கும்பலுடன் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாகவும், தனது ஆடம்பர வாழ்க்கைக்காகவும் மோசடி செயலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. மேலும், இந்த கும்பல் தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த நபர்களைக் குறிவைத்து இதுபோன்ற நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
 

தலைப்புச்செய்திகள்