Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆன்லைனில் ஆக.18 முதல் பொறியியல் வகுப்புகள்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

ஜுலை 28, 2021 04:29

இளங்கலை பொறியியல் மற்றும் முதுகலை வகுப்புகள் ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் இணைய வழியில் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கரோனா தொற்று காரணமாகத் தமிழகத்தில் கடந்த 16 மாதங்களுக்கு மேலாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமலேயே உள்ளன. தொற்று அச்சத்தால் மாற்றுக் கற்பித்தல் முறையாக பள்ளிகள் மற்றும் கல்லூரி வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது தொற்று வேகம் குறைந்து வந்தாலும் கரோனா 3-வது அலை ஏற்படலாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் இளங்கலை மற்றும் முதுகலை வகுப்புகளுக்கு ஆன்லைனில் கற்பித்தலைத் தொடங்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. முதலாம் ஆண்டு நீங்கலாக 3, 5 மற்றும் 7-வது செமஸ்டர் பொறியியல் மாணவர்களுக்கும் முதுகலை 3, 5-வது செமஸ்டர் மாணவர்களுக்கும் இந்தக் கால அட்டவணை பொருந்தும்.

ஆகஸ்ட் 18-ம் தேதி ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி, நவம்பர் 30-ம் தேதி வரை நடைபெறும். மேலும் செமஸ்டர் செய்முறைத் தேர்வுகள் டிசம்பர் 2-ம் தேதியும் எழுத்துத் தேர்வுகள் டிச.13-ம் தேதியும் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்படும். அதேபோல அடுத்த செமஸ்டருக்கான வகுப்புகள் 2022-ம் ஆண்டு ஜனவரி 19-ம் தேதி தொடங்கப்பட வேண்டும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்