Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ் குற்றச்சாட்டு

ஜுலை 28, 2021 04:31

திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி, இன்று (ஜூலை 28) காலை 10 மணி அளவில், அதிமுகவினர் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், ஊராட்சி ஆகிய பகுதிகளில், தங்கள் வீடுகளின் முன்னே பதாகைகளை ஏந்தி கவன ஈர்ப்பு முழக்கங்களை எழுப்பி, தமிழக மக்களின் உரிமைக் குரல்களாய் ஒலிக்க வேண்டும் என, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கேட்டுக்கொண்டனர்.

அதன்படி, இன்று எடப்பாடி பழனிசாமி, சேலம் நெடுஞ்சாலை நகரில் எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியினர் பதாகைகளை ஏந்தி திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின், செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

"முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் முதல் வேலையாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றார். ஆனால், இதுவரை ரத்து செய்யப்படவில்லை. கண் துடைப்புக்காகவே கமிட்டி அமைத்துள்ளனர். கல்விக் கடன் ரத்து, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000, பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு என, எந்த வாக்குறுதியையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை.

எதன் அடிப்படையில் மின் கட்டணம் வசூலிக்கபடுகிறது என்றே தெரியவில்லை. மின் கணக்கீடு பெரும் குளறுபடியாக உள்ளது. அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. அதைச் சரிசெய்யவில்லை. அதிமுக ஆட்சியில் தமிழகம் மின்மிகை மாநிலமாகத் திகழ்ந்தது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை திசை திருப்ப அதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்குகள் போட்டு வருகின்றனர்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு ஸ்டாலின் முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப் போடுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். அதிமுக மக்கள் பிரச்சினைக்காகக் குரல் கொடுக்கும்.

திமுக ஆட்சியை விட்டுப் போகும்போது 1 லட்சம் கோடி கடன் வைத்துதான் சென்றார்கள். அரசின் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிக்காகவே கடன் வாங்கப்பட்டது. இது தற்போது கடனாக இல்லை, முதலீடாக உள்ளது. நீட் தேர்வை ரத்து செய்வோம் என இதுவரை குரல் கொடுத்து வந்த திமுக அமைச்சர்கள், தற்போது மாணவர்களை நீட் தேர்வுக்குத் தயாராகுங்கள் என்கிறார்கள்.

மாணவர்கள் குறைந்த நேரத்தில் எவ்வாறு நீட் தேர்வுக்குத் தயாராக முடியும்? வேண்டுமென்றே திட்டமிட்டு நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவித்து, பெற்றோர்களை ஏமாற்றி திமுக வெற்றி பெற்றுள்ளது. நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற எங்கள் கேள்விக்கு, இதுவரை திமுகவிடம் இருந்து பதில் இல்லை.

கரோனாவைத் தடுக்க திமுக அரசு புதிதாக எதுவும் செய்யவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் செய்த நோய் தடுப்பு நடவடிக்கைகளை அவர்கள் பின்பற்றினார்கள். அவ்வளவுதான். கடந்த அதிமுக ஆட்சியின்போது திமுக அமைச்சர்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதை மறந்து திமுகவினர் பேசுகின்றனர்".

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்