Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு; தீர்வுகாணும் வரை ஏன் தடை விதிக்கக் கூடாது?- உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கேள்வி

ஜுலை 29, 2021 11:11

வன்னியர்களுக்கான 10.5 சதவீதஇடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி முறையீடு செய்யப்பட்டதில், ‘‘தீர்வு காணும் வரை அந்த இடஒதுக்கீட்டுக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது?’’ என தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள வன்னியர் சமுதாயத்தினருக்கு 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்க, முந்தைய அதிமுக அரசு அவசர சட்டம் இயற்றி அரசிதழிலும் வெளியிட்டது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்திலும், மதுரை உயர் நீதிமன்றக் கிளையிலும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. அதில்‘‘சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்புக்கு சில மணி நேரத்துக்கு முன்பாக அப்போதைய அதிமுக அரசு அரசியல் கண்ணோட்டத்துடன் வன்னியர் சமுதாயத்துக்கு மட்டும் பிரத்யேகமாக 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டுள்ளது. இது சட்டவிரோதமானது.

இதனால் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான பிரிவில் அங்கம் வகிக்கும் பிற சமுதாயத்தினர் கடுமையாகப் பாதிக்கப்படுவர். குறிப்பாக விளிம்பு நிலையில் உள்ளவர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின்தங்கும் சூழல் ஏற்படும். எனவே இந்த உள்ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’’ என கோரியிருந்தனர்.

இந்நிலையில், இந்த சட்டம் நடப்பு கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசாணை பிறப்பித்தது.

அதையடுத்து வன்னியர் சமுதாயத்துக்கு 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தைஎதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் நேற்று காலை முறையிட்டனர்.

அதையடுத்து நீதிபதிகள், இந்த 10.5 சதவீத உள்ஒதுக்கீடு தொடர்பான சட்டம் இந்த கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளதா? என்பது குறி்த்து தமிழகஅரசு விளக்கம் அளிக்க வேணடும் என உத்தரவிட்டு விசாரணையை பிற்பகல் 2.15-க்கு தள்ளிவைத்தனர்.

பிற்பகல் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசுதலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, ‘‘வன்னியர் சமுதாயத்துக்கு 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் கடந்த பிப்ரவரி மாதம் முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தை எதிர்த்து சென்னைஉயர் நீதிமன்றத்தில் 23 வழக்குகளும், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் 5 வழக்குகளும் என மொத்தம் 28 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இதுதவிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட 4 வழக்குகளில் இந்த உள் இடஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. இந்த இடஒதுக்கீட்டால் யாரும் பாதிக்கப்படப் போவதில்லை. அந்த சட்டத்தை அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் கடந்த ஏப்ரல் மாதமே அமல்படுத்திவிட்டது. எனவே இந்த உள்இடஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை’’ என்றார்.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் குறுக்கிட்ட வழக்கறிஞர்கள், ‘‘உச்ச நீதிமன்றம், ‘இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில் முதலில் தீர்வு கண்ட பிறகு, உச்ச நீதிமன்றத்தில் முடிவு செய்யலாம்’, எனக் கூறியுள்ளது. இந்த சட்டத்துக்கு தமிழக அரசு அனுமதியளித்து அரசாணை பிறப்பித்துள்ளதால் பொறியியல், மருத்துவம் என உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான பிரிவில் உள்ள பிற சமுதாயத்தினர் கடுமையாகப் பாதிக்கப்படுவர்’’ என வாதி்ட்டனர்.

அதையடுத்து தலைமை நீதிபதி அமர்வு, ‘‘இந்த வழக்கில் தீர்வு காணும் வரை இந்த உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது?’’ என கேள்வி எழுப்பினர். பின்னர் இந்த வழக்குகளை வரும்ஆகஸ்ட் 2-வது வாரத்தில் விசாரணைக்குப் பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

தலைப்புச்செய்திகள்