Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதுச்சேரி இ.எஸ்.ஐ. அலுவலகத்தில் சிபிஐ சோதனை - லஞ்சம் வாங்கிய இரு அதிகாரிகள் சிக்கினர்

ஜுலை 29, 2021 11:20

புதுச்சேரி: தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக புதுச்சேரி மண்டல அலுவலகத்தில் முறைகேட் டில் ஈடுபட்ட அதிகாரிகள் பெட்ராஸ், மோகித் ஆகிய இருவரை கைது செய்து அழைத்து செல்லும் சிபிஐ அதிகாரிகள். படம்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரி முதலியார்பேட்டை புவன்கரே வீதியில் தொழிலாளர்களின் அரசு காப்பீட்டுக் கழகத்தின் (இ.எஸ்.ஐ.) மண்டல அலுவலகம் இயங்கி வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தொழிலாளர் துறை அறிவுறுத்தலின்படி, மருத்துவக் காப்பீடு திட்டங்கள் இந்த அலுவலகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மருத்துவக் காப்பீடு எடுக்காத நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளை மிரட்டி இ.எஸ்.ஐ. அதிகாரிகள் லஞ்சம் வாங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக சென்னை சிபிஐ அலுவலகத்துக்கு புகார்கள் சென்றன.

இந்நிலையில் 4 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு நேற்று பிற்பகலில் இ.எஸ்.ஐ. மண்டல அலுவலகத்துக்கு வந்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் ஒரு தொழிற்சாலை நிறுவனத்திடம் இருந்து ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக இருவரிடம் தீவிர விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள்அவர்களிடம் இருந்த பல்வேறுகோப்புகள், கணினி உள்ளிட்டவற்றை சோதனையிட்டனர்.

மாலை வரை நீடித்த இந்த சோதனையின் முடிவில், லஞ்ச மோசடி தொடர்பாக இ.எஸ்.ஐ. மண்டல துணை இயக்குநர் பெட்ராஸ், சமூக பாதுகாப்பு அலுவலர் மோகித் ஆகிய இருவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து, சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.

மேலும், ஆவணங்கள், தகவல்கள் அடங்கிய கணினி, ஹார்டு டிஸ்க் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.

தலைப்புச்செய்திகள்