Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மகனுடன் சேர்ந்து பிளஸ்-1 தேர்வு எழுதிய தாய்

ஜுலை 29, 2021 04:28

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே காக்கநாடு பகுதியைச் சேர்ந்தவர் சைனா பாபீவி (வயது59). அழகு கலை நிபுணரான இவருக்கு படிப்பின் மீது தீவிர ஆர்வம் இருந்த போதிலும் அவரால் பள்ளி கல்வியை முடிக்க முடியவில்லை. இவரது மகன் இர்பான்(27). இவர் அழகு கலை நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி படிப்பு தேர்வில் தோல்வி அடைந்தார். இந்த நிலையில் இருவரும் எப்படியாவது பிளஸ்-1 தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என முடிவு செய்தனர்.

இதனால் இருவரும் வீட்டில் பாடங்களை படித்து வந்தனர். அப்பகுதியில் உள்ள கற்றல் மையத்தில் சேர்ந்து பிளஸ்-1 படித்து தேர்வு எழுத பயிற்சி பெற்று வந்தனர். இந்த நிலையில் இருவரும் எர்ணாகுளத்தில் உள்ள அரசு பள்ளியில் தேர்வு எழுதினர். தாயும், மகனும் ஒரே பள்ளியில் தேர்வு எழுதியது அங்கு வந்திருந்த பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.

இதுகுறித்து சைனா பாபீவி கூறும்போது, குடும்பத்திற்காக பள்ளி படிப்பை நிறைவு செய்ய முடியாதது மனதில் பெரும் வருத்தமாக இருந்தது. இப்போது தேர்வு எழுதியதன் மூலம் அந்த வருத்தம் தீர்ந்துள்ளது. நிச்சயம் தேர்வில் நானும், எனது மகனும் வெற்றி பெறுவோம். இந்த வயதில் நான் படிக்க எனது கணவரும், குடும்பத்தினரும் முழு ஆதரவாக இருந்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்