Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பத்திரிகை, ஊடக ஆசிரியர்கள் மீதான 90 அவதூறு வழக்குகளை திரும்ப பெற முதல்வர் உத்தரவு

ஜுலை 30, 2021 11:13

பத்திரிகை, தொலைக்காட்சி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் மீது கடந்த 10 ஆண்டுகளில் போடப்பட்ட 90 அவதூறு வழக்குகளை திரும்ப பெற முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2021 பிப்ரவரி மாதம் வரை அவதூறு பேச்சுகள், செய்தி வெளியீடுகளுக்காக தினசரி மற்றும் வாரப்பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர்கள், அச்சிட்டவர், வெளியிட்டவர், தொலைக்காட்சி ஊடகங்களின் செய்தி ஆசிரியர், பேட்டி அளித்தவர் ஆகியோர் மீது அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்தன.

இவ்வாறு நாளிதழ்களின் ஆசிரியர்கள் மீது 43 வழக்குகள், வார இதழ்களின் ஆசிரியர்கள் மீது 43வழக்குகள், தொலைக்காட்சிகளின் ஆசிரியர்கள் மீது 7 வழக்குகள் போடப்பட்டிருந்தன.

‘பழிவாங்கும் நோக்கில் பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட அவதூறு வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறப்படும்’ என்று திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட 90 வழக்குகளை திரும்ப பெறமுதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் உள்ளஅவதூறு வழக்குகளின் விவரங்களை சமீபத்தில் அரசு கேட்டுப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்