Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆந்திராவில் 3 மாதங்களுக்கு பிறகு நாளை திரையரங்குகள் திறப்பு

ஜுலை 30, 2021 11:18

கரோனா 2-ம் அலை பரவலால் கடந்த 3 மாதங்களாக ஆந்திராவில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனிடையே தொற்று குறைந்து வரும் நிலையில், கடந்த ஜூலை 8-ம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்கை இயக்கலாம் என ஆந்திர அரசு அனுமதி வழங்கியது. ஆனால், 50 சதவீத பார்வையாளர்கள் மட்டும் திரையரங்கிற்கு வந்தால், மிகுந்த நஷ்டம் ஏற்படும் என கூறப்பட்டது. இதனால், திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்பட விநியோகஸ்தர் சங்கங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், கடந்த ஜூலை 8-ம் தேதி திரையரங்குகள் திறக்கப்படவில்லை.

தற்போது மீண்டும் வரும் 31ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் ‘சி’ சென்டர்களில் உள்ள திரையரங்குகள் திறக்கப்படலாமென அரசு அனுமதி வழங்கியது. மேலும், 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டுமென்றும், முக கவசம், சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டுமென்றும் அரசு வலியுறுத்தி உள்ளது. தெலங்கானா மாநிலத்தில் 100 சதவீத பார்வையாளர்களுடன் வரும் ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி முதல் திரையரங்குகள் இயங்க தெலங்கானா அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால், விரைவில் புதிய தெலுங்கு திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 78,784 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்ததில், 2,107 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் ஆந்திராவில் கரோனாவால் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை ஆந்திராவில் 19,62,049 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதுவரை ஆந்திராவில் கரோனாவால் 13,332 பேர் உயிரிழந்துள்ளனர். 21,279 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தலைப்புச்செய்திகள்