Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதுச்சேரியில் முதன்முறையாக இரவில் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் சுகாதாரத்துறை ஊழியர்கள்

ஜுலை 30, 2021 11:27

வம்புப்பட்டு கிராமத்தில் மாலையில் பணி முடிந்து வீடு திரும்பியோருக்கு, வீட்டிற்கேச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் சுகாதார ஊழியர்கள். புதுச்சேரியில் முதன்முறையாக இரவு நேரங்களில் வீடு வீடாகச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் நடைமுறையை சுகாதாரத்துறை ஊழியர்கள் தொடங்கியுள்ளனர்.

புதுச்சேரியில் கரோனா பரவல் தற்போது குறைந்து வந்த போதிலும், 100 சதவீத தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாநிலமாக அறிவிக்க திட்டமிட்டு பணிகள் நடந்து வருகிறது. இதற்காக சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறன்றன.

இருந்தபோதிலும் கிராமப் புறங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்வோரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், அதனை சரி செய்ய திட்டமிட்டனர். குறிப்பாக தினமும் வேலைக்கு சென்றால்தான் உணவு என்ற சூழலில் பலரும் இருப்பதால் கூலி வேலைக்கு செல்வோரின் வசதிக்காக இரவு நேரங்களில் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் பணியை புதுச்சேரி வம்புப்பட்டு கிராமத்தில் முதல்முறையாக தொடங்கியுள்ளனர். சோரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் புதிய முயற்சியாக இதை செய்கின்றனர். ஸ்பீக்கர் மூலம் அறிவிப்பை வெளியிட்டபடி வீட்டுக்கே சென்று தடுப்பூசி செலுத்துகிறார்கள்.

இதுதொடர்பாக சோரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் காசி முனியன் கூறுகையில், “கிராமப் பகுதிகளில் வேலைக்கு செல்வோர் சுகாதாரத் துறையால் நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியவில்லை. இதையறிந்து சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் இரவு நேர தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறுகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர்.

இதன்மூலம் 100 சதவீத கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட மாநிலமாக புதுச்சேரி மாறும். இதன் காரணமாக மூன்றாம் அலையை நாம் எளிதில் எதிர்கொள்ள முடியும்” என நம்பிக்கை தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்