Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொடூர சாலை விபத்தை மறக்க முடியாது: உ.பி.யில் 18 பேர் உயிரிழந்த சம்பவத்தை நினைவுகூர்ந்த சக பயணிகள்

ஜுலை 30, 2021 11:31

உத்தரபிரதேசத்தில் 18 பேரை பலிகொண்ட கொடூர சாலை விபத்தை வாழ்நாள் முழவதும் மறக்க முடியாது என சக பயணிகள் கூறினர். உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்ந்த விபத்தில் 18 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 25 பேர் காயம் அடைந்தனர். விபத்தில் உயிர் தப்பியவர்களை சொந்த ஊருக்கு அழைத்துச்செல்வதற்காக விபத்து நடந்த இடத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள அரசுப் பள்ளியில் புதன்கிழமை பஸ்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

அங்கு பேருந்துக்காக காத்திருந்தவர்களில் பிஹாரின் சகார்சா மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது சுபாஷ் சதாவும் ஒருவர். சுபாஷ் தனது மனைவி ராவியா, 2 குழந்தைகள் மற்றும் தனது தம்பி நீரஜ்உடன் அங்கு காத்திருந்தார். சுபாஷும் நீரஜும் ஹரியணா மாநிலம் அம்பாலாவில் கட்டுமான தொழிலாளர்களாக வேலை பார்த்தனர்.

விபத்து குறித்து சுபாஷ் கூறும்போது, “இந்த கொடூரமான விபத்தை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. அதிர்ஷ்டம் காரணமாக நாங்கள் உயிர் தப்பினோம். நாங்கள் அம்பாலாவில் பஸ் ஏறினோம். பெரியவர்களுக்கு ரூ.1,400 கட்டணம் என டிரைவர் கூறினார். ஏசி பேருந்தாகவும் பார்ப்பதற்கு நன்றாக இருந்ததாலும் நாங்கள் ஒப்புக் கொண்டோம். ஆனால் பேருந்து அம்பாலாவை விட்டு புறப்பட்ட பிறகு 80 முதல் 90 பேர் வரை ஏறிக்கொண்டனர்.

ஆனால் கர்னால் அருகே பேருந்தை நிறுத்திய டிரைவர், பேருந்தை சுத்தம் செய்ய வேண்டும் எனக் கூறி அனைவரையும் கீழே இறக்கினார். அப்போது மேலும் சிலர் பேருந்தில் பயணிக்க இருப்பதாக டிரைவர் கூறினார். இதற்குஎங்களுடன் வந்த சிலர் எதிர்ப்புதெரிவித்தனர். ஆனால் இதை டிரைவர் ஏற்கவில்லை. ஏற்கெனவே கட்டணத்தை கொடுத்துவிட்டதால் பயணத்தை தொடர வேண்டியிருந்தது. ஆனால் அங்கு புதியவர்கள் பேருந்தில் ஏறிய பிறகு நெரிசல் அதிகரித்துவிட்டது.

பாரபங்கி மாவட்டத்தில் இரவு 8.30 மணியளவில் பேருந்து பழுதடைந்து விட்டது. இதனை சரிசெய்ய 1 மணி நேரத்துக்கு மேலாக முயன்றும் பலனில்லை. இதனால் புழுக்கம் காரணமாக பலர் கீழே இறங்கி, சுற்றிலும் நடக்கத் தொடங்கினர். பிறகு பலர் பேருந்துக்கு முன்பாக சாலையில் அமர்ந்தும் படுத்தும் ஓய்வெடுத்தனர். இவ்வாறு பேருந்துக்கு முன் ஓய்வெடுத்தது தான் இத்தனை உயிரிப்புக்கு காரணமாகிவிட்டது” என்றார்.

பேருந்தில் கணவர் சஞ்சய் (26) உடன் பயணித்த சீமா (24) கூறும்போது, “லாரி மோதிய வேகத்தில் 10 மீட்டருக்கு அப்பால் அமர்ந்திருந்தவர்கள் மீதும்பேருந்து ஏறியதை நான் கண்டேன். இறந்தவர்களும் காயம் அடைந்தவர்களும் சாலை முழுக்க கிடந்தனர். ஒவ்வொருவரும் தங்களுடன் வந்தவர்களை தேடத் தொடங்கினர். இறந்த உடல்களைக் கண்டு சிலர் கதறினர். அந்தக் காட்சிகளை என்னால் மறக்க முடியாது” என்றார்.

தலைப்புச்செய்திகள்