Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காங்கிரஸ் இல்லாத இந்தியா உருவாகிவிட்டது; ராகுல் இத்தாலிக்குப் பிரதமராகலாம்: புதுச்சேரி பாஜக தலைவர் பேட்டி

ஜுலை 30, 2021 04:33

காங்கிரஸ் இல்லாத இந்தியா உருவாகிவிட்டது. இந்தியாவில் பிரதமராகும் வாய்ப்பு ராகுல் காந்திக்கு கிடையாது. ஒருவேளை இத்தாலிக்கு வேண்டுமானால் பிரதமராகலாம் என்று புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் தெரிவித்தார்.

புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் மாநிலத் தலைவர் சாமிநாதன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''இந்தியாவில் 50 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மிகப்பெரிய துரோகம் செய்தது. இந்தியாவில் ஓபிசி மக்கள்தான் அதிகமாக உள்ளனர். அவர்களுக்கு இட ஒதுக்கீடு தராமல் புறக்கணித்தனர். பாஜக ஆட்சிக்கு வந்தால் ஓபிசி மக்களுக்கான இட ஒதுக்கீட்டை வழங்குவோம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 1986-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் வழிகாட்டுதல்டியும், 2015-ம் ஆண்டு சலோனி குமார் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு கேட்டுத் தாக்கல் செய்த மனுவிற்கு வழங்கப்பட்ட நீதிமன்ற அறிவுரைகளின்படியும் அனைவருக்கும் பலன் கிடைக்கும் வகையில் மத்தியத் தொகுப்பில் உள்ள மருத்துவப் பட்டப்படிப்பு, மேல்படிப்பு, எம்டி, எம்எஸ், பல் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து மருத்துவப் படிப்புகளுக்கும் 27 சதவீத இட ஒதுக்கீட்டைப் பிரதமர் கொடுத்துள்ளார். இதன் மூலம் மருத்துவக் கல்வியில் 5,500 ஓபிசி மாணவர்களுக்கு இந்த ஆண்டே இடம் கிடைக்கும்.

புதுவையில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது அவர்களது இயலாமையால்தான். செல்போன் ஒட்டுக் கேட்பால் ஆட்சி கவிழ்ந்தது என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறுவது ஏற்புடையதல்ல. செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டது என்று கூறும் நாராயணசாமி, அதனை நிரூபிக்கத் தயாரா? ஒவ்வொரு நாளும் காங்கிரஸின் செல்வாக்கும், வாக்கு வங்கியும் சரிந்து வருகிறது. இந்தியாவில் ஒரு போதும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க முடியாது. காங்கிரஸ் இல்லாத இந்தியா உருவாகிவிட்டது. இந்தியாவில் பிரதமராகும் வாய்ப்பு ராகுல் காந்திக்கு கிடையாது. ஒருவேளை இத்தாலிக்கு வேண்டுமானால் பிரதமராகலாம்" என்று தெரிவித்தார்.

புதுச்சேரியில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை அரசு நடப்பாண்டில் பெற பாஜக வலியுறுத்துமா என்று கேட்டதற்கு, "புதுச்சேரியில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களைப் பெறுவதற்கு பாஜக கூட்டணி அரசு பரிசீலிக்கும்" என்று குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், "மருத்துவக் கல்லூரிகள் சுகாதாரத் துறையின் கீழ் வருவதால் 50 சதவீத இட ஒதுக்கீட்டைப் பெறுவது தொடர்பாக முதல்வர் ஆலோசனை செய்து முடிவை அறிவிப்பார். மேலும், மத்தியப் பல்கலைக்கழகத்தில் அனைத்துப் பாடப்பிரிவுகளிலும் புதுவை மாணவர்களுக்கு 25 சதவீத இடங்கள் பெறுவது தொடர்பான கோப்பு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நாங்கள் டெல்லிக்குச் செல்லும்போது மத்திய அமைச்சரைச் சந்தித்து அதனைக் கேட்டுப் பெறுவோம்" என்று தெரிவித்தார்.
 

தலைப்புச்செய்திகள்