Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாமக்கல்லில் முட்டை விலை மேலும் 20 காசுகள் குறைப்பு

ஜுலை 31, 2021 11:27

நாமக்கல்: கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் தாக்கத்தால் நாமக்கல் கோழிப் பண்ணையாளர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் நாமக்கல் பகுதியில் உள்ள பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பறவைக்காய்ச்சல் பீதி காரணமாக நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையில் ஏற்ற இறக்கம் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் இன்று தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனை கூட்டம், அதன் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் முட்டை விலை நிர்ணயம் தொடர்பாக பண்ணையாளர்களிடம் ஆலோசிக்கப்பட்டது.

முட்டை உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், வெளி மாநிலங்களுக்கு அனுப்புவது சற்று தடைபட்டுள்ளதாலும், மற்ற மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாலும் விலையை குறைக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் ஆடி மாதம் என்பதால் மக்களிடையே நுகர்வு குறைந்துள்ளது. இதன் காரணமாக நாமக்கல் மண்டலத்தில் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு முட்டை விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.4.60 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

முட்டை விலையை பொறுத்தவரை இம்மாத தொடக்கத்தில் ரூ.5.05 ஆக இருந்தது. பின்பு 15 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.4.90 ஆனது. பின்பு 10 காசு குறைந்து 10-ந்தேதி ரூ.4.80 என நிர்ணயிக்கப்பட்டது. அதன்பிறகு 15-ந்தேதி 15 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.4.95 ஆனது. 19-ந்தேதி விலை அதிகபட்சமாக ரூ.5.15 என நிர்ணயம் செய்யப்பட்டது.

பின்பு 26-ந்தேதி முதல் விலை குறைய தொடங்கியது. 26-ந்தேதி 15 காசுகள், 29-ந்தேதி 20 காசுகள் விலை குறைப்பு செய்யப்பட்டது. கடந்த 10 நாட்களில் 55 காசுகள் குறைந்துள்ளன.

பிற மண்டலங்களில் முட்டை விலை வருமாறு:-

ஆமதாபாத்-ரூ.4.60, பெங்களூரு-ரூ.4.75, சென்னை -ரூ.5, மும்பை-ரூ.4.80, விஜயவாடா-ரூ.4.35.

தலைப்புச்செய்திகள்