Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காவேரிப்பாக்கம் அருகே மகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை

ஜுலை 31, 2021 03:07

நெமிலி: ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த சித்தஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் தயாளன் கூலி தொழிலாளி. இவருடைய மனைவி வெண்ணிலா (வயது 35). இவர்களது மகன் கீர்த்தி (5) மகள் ஹரிதா (3). தயாளனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. நேற்று இரவு தயாளன் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து தயாளன் வெளியே சென்றுவிட்டார். அவரது தாயார் தாயம்மாள் வீட்டுக்கு வெளியே படுத்து தூங்கினார். வெண்ணிலா தனது குழந்தைகளுடன் வீட்டுக்குள் படுத்திருந்தார். கணவன் தகராறு செய்ததால் மனமுடைந்து காணப்பட்ட வெண்ணிலா மகன் கீர்த்தியின் கையை வீட்டுக்குள் இருந்த ஒரு நாற்காலியில் கட்டி வைத்தார்.

பின்னர் மகள் ஹரிதாவை தூக்கிக்கொண்டு வீட்டுக்கு பின்புறம் வந்தார். அங்குள்ள மரத்தில் குழந்தைகள் விளையாட கட்டப்பட்டிருந்த சேலையால் ஆன தொட்டிலில் சிறுமி ஹரிதாவை தூக்கில் தொங்க விட்டார். இதில் குழந்தை துடிதுடித்து இறந்தது. தொடர்ந்து வெண்ணிலாவும் அங்குள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இன்று காலையில் வெண்ணிலா மற்றும் குழந்தை தூக்கில் தொங்குவதை கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த அவலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மகளை கொன்று தாய் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தலைப்புச்செய்திகள்