Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிகாரியை கண்டித்து அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம்

ஜுலை 31, 2021 03:28

பல்லடம்: பல்லடம் வட்டாரத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எடை வளர்ச்சி குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக அனுப்பட்டி அங்கன்வாடி மையத்திற்கு பல்லடம் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் விஜயலட்சுமி சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த அங்கன்வாடி உதவியாளர் நாகராணியிடம் தரக்குறைவாகவும், தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் கூறப்படுகிறது. 

இதனால் அவர் மனமுடைந்தார். இதுகுறித்து கணவர் ஆறுமுகம் கேட்டபோது வளர்ச்சித் திட்ட அலுவலர் விஜயலட்சுமி தன்னை தரக்குறைவாக பேசியது குறித்து கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது கணவர் அங்கன்வாடி பணியாளர்கள் சங்கத்தில் முறையிட்டு உள்ளார். 

இதையடுத்து அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் மேற்கு பல்லடம் பகுதியில் உள்ள பல்லடம் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் விஜயலட்சுமியை அலுவலகத்தில் முற்றுகையிட்டு நியாயம் கேட்டுள்ளனர். இதற்கு சரியாக பதில் அளிக்காத காரணத்தால் அலுவலகத்தின் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகைப் போராட்டம் நடத்தினர். 

இதையடுத்து அங்கு வந்த பல்லடம் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். ஆனால் சமாதானம் அடையாத அங்கன்வாடி பணியாளர்கள் விஜயலட்சுமியை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றனர். இதையடுத்து பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு வெற்றிச்செல்வன் அங்கு வந்து அங்கன்வாடி பணியாளர்களுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.  

மாவட்ட கலெக்டரிடம் அங்கன்வாடி பணியாளர்கள் சந்தித்து பேசுவதற்கு ஏற்பாடு செய்து தருவதாகவும், அவரிடம் கோரிக்கைகளை கூறி தீர்வுகாணும்படியும் வெற்றிச்செல்வன் கூறியதையடுத்து அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தலைப்புச்செய்திகள்