Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மீண்டும் மிரட்டும் கொரோனா: கோவையில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள்

ஆகஸ்டு 01, 2021 11:47

கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த மே மாதம் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தது. ஒரு நாளைக்கு 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வந்தனர். இதையடுத்து அரசு, மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையின் காரணமாக தொற்று பாதிப்பு கணிசமாக குறைய தொடங்கியது. ஒரு நாள் பாதிப்பு 150-க்கும் கீழ் பதிவாகி வந்தது.

தொற்று குறைந்து பொதுபோக்குவரத்து தொடங்கியதன் காரணமாக மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பினர். இந்த நிலையில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக கோவையில் கொரோனா பாதிப்பு மெல்ல, மெல்ல உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குறைந்து கொண்டே சென்ற கொரோனா தொற்று தற்போது மீண்டும் மெல்ல தலை தூக்க தொடங்கியுள்ளது. மக்களுக்கு இது 3-வது அலையின் தொடக்கமாக இருக்குமோ என்ற அச்ச உணர்வை கொடுத்துள்ளது.

கடந்த 25-ந் தேதி மாவட்டத்தில் வெறும் 169 பேர் மட்டுமே தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். அந்த எண்ணிக்கை அடுத்த நாளில் இருந்து மெல்ல, மெல்ல உயர்ந்து 200-யை கடந்து விட்டது. நேற்று ஒரே நாளில் புதிதாக 246 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 29 ஆயிரத்து 35 ஆக உயர்ந்தது. முதியவர் ஒருவர் பலியானதை அடுத்து எண்ணிக்கை 2,177 ஆக அதிகரித்துள்ளது. தற்போது ஆஸ்பத்திரிகளில் 1,940 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கோவையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக நாளை முதல் மாவட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அண்டை மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருவதால் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் பல்வேறு வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. அதில் தமிழக அரசால் ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் கோவை மாவட்டத்துக்கு கூடுதலாக நாளை(திங்கட்கிழமை) முதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.

அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள பால், மருந்தகங்கள், காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.

கோவை மாநகராட்சியில் கிராஸ்கட் ரோடு, 100 அடிரோடு, காந்திபுரம் 5,6,7-வது வீதிகள், ஒப்பணக்கார வீதி, ராமமூர்த்தி சாலை, சாரமேடு சாலை(ராயல்நகர் சந்திப்பு), ரைஸ்மில் சாலை, என்.பி.இட்டேரி சாலை, எல்லை தோட்ட சந்திப்பு, துடியலூர் சந்திப்பு ஆகிய தெருக்களில் இயங்கும் அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்படுகிறது.

மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்களும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்படும். மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவைக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து மார்க்கெட்டுகளில் மொத்த விற்பனை நிலையங்களுக்கு மட்டும் அனுமதி. சில்லரை விற்பனைக்கு அனுமதியில்லை. 50 சதவீத கடைகள் சுழற்சி முறையில் இயங்க அனுமதிக்கப்படும். சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் இதனை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கேரள- தமிழக மாநில எல்லைகள் அனைத்தும் சோதனை சாவடி அமைத்து கண்காணிக்கப்படுகிறது. அந்த வழியாக வரும் வாகனங்களில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் கட்டாயமாக 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்று அல்லது 2 தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். சான்று உள்ளவர்கள் மட்டுமே கோவை மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். சான்று இல்லாதவர்களுக்கு சோதனை சாவடிகளிலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்