Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாகையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 150 கிலோ கஞ்சா பறிமுதல் - 8 வாலிபர்கள் கைது

ஆகஸ்டு 01, 2021 04:18

நாகப்பட்டினம்: நாகையில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து தனிப்படை சப்இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் நாகை 2-வது கடற்கரை சாலையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு கார் நிற்பதை பார்த்து அருகில் சென்று சோதனை செய்தனர். காரில் சுவாமி படங்கள் அதிகம் இருந்தது. சந்தேகம் அடைந்த தனிப்படை போலீசார் சுவாமி படங்களை எடுத்து பிரித்து பார்த்த போது அதன் உள்ளே ரூ.60 லட்சம் மதிப்பில் 150 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து காரில் இருந்த 8 பேரை பிடித்து நாகை டவுன் போலீஸ் ஸ்டே‌ஷனில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் திருச்சி, மதுரை, தஞ்சை உள்ளிட்ட இடங்களில் இருந்து வரும் கஞ்சாவை வாங்கி அதை சிறிய பொட்டலமாக போட்டு போலீசாருக்கு சந்தேகம் வராதபடி சுவாமி படங்கள் விற்பனை செய்வது போல் உள்ளே வைத்து காரில் நாகை கொண்டு வந்து அதன் பின்னர் படகுகள் மூலம் இலங்கைக்கு கஞ்சா கடத்துவது தெரிய வந்தது.

மேலும் 8 பேரிடமும் நடத்திய விசாரணையில் அவர்கள் நாகை கீச்சாங்குப்பம் மெயின் ரோட்டை சேர்ந்த வீராகுமார் (22), வெளிப்பாளையம் சுப்ரமணிய பத்தர் காலனியை சேர்ந்த முகேஷ் (24), புதுப் பள்ளி மேற்கு வேட்டைகாரனிருப்பு பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த நிவாஸ் (26), விழுந்த மாவடி தம்பிரான்குடியிருப்பு பகுதியை சேர்ந்த அருண் (23 ), காரைக்கால் டி.ஆர் பட்டினத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி (26), ஆழியூர் மெயின் ரோட்டை சேர்ந்த சுகுமார் (42), அந்தன பேட்டை புடவைகார தெருவை சேர்ந்த ஜெகபர் சாதிக் (36), சிக்கல் மேலவீதியை சேர்ந்த தியாகராஜன் (42) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து 8 பேரையும் கைது செய்தனர். கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்பட்ட சொகுசு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கஞ்சா கடத்தியது தொடர்பாக மேலும் 5 பேரை தேடி வருகின்றனர். நாகை, வேதாரண்யம் கடற்கரை வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தி செல்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடலோர காவல் குழும போலீசார் சோதனையும் மீறி கஞ்சா கடத்தப்பட்தாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்