Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆந்திராவில் 300 நாய்கள் வி‌ஷம் வைத்து சாகடிப்பு - ஊராட்சி அலுவலர்களிடம் விசாரணை

ஆகஸ்டு 02, 2021 11:14

திருப்பதி: ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் லிங்கபாளையம் கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் அதிக அளவில் நாய்கள் பெருகி விட்டதால் வாகனங்களில் செல்பவர்களை துரத்தி கடிப்பதாக அப்பகுதி மக்கள் பஞ்சாயத்து அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் நாய்களை பிடித்துச் சென்று வனப்பகுதியில் விட்டாலும் மீண்டும் திரும்பி ஊருக்குள் வந்து விடும் என எண்ணினர்.

இதனால் பிரியாணி வாங்கி வந்து அதில் வி‌ஷத்தைக் கலந்து நாய்களுக்கு வைத்துள்ளனர். பிரியாணியை சாப்பிட்ட 300 நாய்கள் துடிதுடித்து சிறிது நேரத்தில் ஆங்காங்கே இறந்து கிடந்தது. இதையடுத்து பஞ்சாயத்து அலுவலர்கள் நாய்களை வாகனத்தில் எடுத்துச் சென்று வனப்பகுதியில் வீசி விட்டு வந்தனர். 2 நாட்கள் கழித்து வனப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியது. அந்த வழியாக சென்றவர்கள் 300க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்

இதுகுறித்து ஊருக்குள் வந்து தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற வனவிலங்கு ஆர்வலர்கள் இறந்துபோன நாய்களை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பள்ளம் தோண்டி கூட புதைக்காமல் அப்படியே திறந்தவெளியில் வீசி சென்றுள்ளனர். நாய்கள் இறந்து கிடப்பதை தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரவி விட்டனர்.

மேலும் நாய்கள் இறந்தது குறித்து தர்மாஜி குடேம் போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து பஞ்சாயத்து அலுவலகத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அவர்கள் நாங்கள் நாய்களை கொல்லவில்லை வேறு யாராவது கொன்றிருக்கலாம் என மறுப்பு தெரிவித்தனர். போலீசார் இறந்த நாய்களை பிரேத பரிசோதனைக்காக ஹைதராபாத்தில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் நாய்களை கொன்றவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்