Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு அழிவு காலம்: பாஜக தலைவரின் பேச்சுக்கு சிவசேனா காட்டம்

ஆகஸ்டு 02, 2021 03:09

மகாராஷ்டிராவில் சிவசேனாவின் தலைமையகமான சிவசேனா பவனைத் தேவைப்பட்டால் இடிப்போம் என்று கூறிய பாஜக தலைவரின் பேச்சுக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள சிவசேனா கட்சி, மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு அழிவு காலம் அருகே வந்துவிட்டது என்று காட்டமாகத் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர பாஜக மூத்த தலைவர் பிரசாத் லாட் பேசுகையில், “தேவைப்பட்டால் மும்பையின் மத்தியப் பகுதியில் உள்ள சிவசேனாவின் தலைமையகமான சிவசேனா பவனையும் இடிக்கத் தயங்கமாட்டோம்” எனத் தெரிவித்தார். பிரசாத் லாட் கருத்துக்குக் கடும் கண்டனம் எழுந்த நிலையில் தான் அவ்வாறு பேசவில்லை, ஊடகங்கள் திரித்து தவறாக வெளியிட்டுவிட்டன என்று தெரிவித்தார்.

பாஜக தலைவர் பிரசாத் லாட் கருத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள சிவசேனா கட்சி, தனது அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் காட்டமாக எழுதியுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:

''பாஜகவினர் நடந்துகொள்ளும் முறையால், மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜகவுக்கான அழிவு காலம் அருகே வந்துவிட்டது. சிவசேனா பவனை யாரெல்லாம் இழிவாகப் பார்த்தார்களோ அந்தத் தலைவர்களும், அவர்களின் கட்சியும் வோர்லி கழிவு நீரோடையில் அடித்துச் செல்லப்பட்டார்கள்.

சிவசேனா பவனை இடிப்போம் என்றரீதியான சில பாஜகவினரின் பேச்சும், மேடையில் அமர்ந்திருந்த மராத்தி தலைவர்களின் கைதட்டலும், மராத்திய பெருமைக்கு துரோகம் அல்லவா? சிவசேனாவுடன் பலருக்கும் அரசியல்ரீதியான வேறுபாடு உள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் சிவசேனாவுக்கு சவால் விடுத்துள்ளார்கள். ஆனால், அந்த சவால்களை சிவசேனா சந்தித்துள்ளது. அரசியல்ரீதியாக சவால் விடுத்தவர்கள் ஒருபோதும் சிவசேனா பவனை இடித்துவிடுவதாகப் பேசியதில்லை.

சிவசேனா பவனில் பாலசாகேப் தாக்கரேவின் சிலையும் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் சிலையும் இருக்கிறது. சிவாஜியின் கொடியும் அங்கு பறக்கிறது. இவைதான் சிலருக்குத் தொந்தரவாக இருக்கிறது. அதனால்தான், சிவசேனா பவனை அழிக்க வேண்டும், இடிக்க வேண்டும் என்று பேசுகிறார்கள். பாஜக என்பது ஒருகாலத்தில் விசுவாசமான தொண்டர்கள், அடிமட்டம்வரையில் இருந்தார்கள்.

வெளியாட்களுக்கோ அல்லது கட்சியைத் தாழ்த்துபவர்களுக்கோ இடமில்லை என்று இருந்தது. ஆனால், தற்போது, கட்சியின் உண்மையான சிந்தாந்தங்களைக் கொண்டிருப்பவர்கள்கூட தரம் தாழ்ந்தவர்களைத்தான் உயர்த்திப் பிடிக்கிறார்கள். அதனால்தான் கூறுகிறோம், மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு அழிவு காலம் நெருங்கிவிட்டது''.

இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே மும்பையில் நேற்று நடந்த மறுசீரமைப்புத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருடன் சேர்ந்து முதல்வர் உத்தவ் தாக்கரேவும் பங்கேற்றார்.

அப்போது உத்தவ் தாக்கரே பேசுகையில், “நாங்கள் இப்போது விமர்சனங்களைக் கேட்கப் பழகிவிட்டோம். ஆனால், விமர்சனங்களுக்கு அஞ்சமாட்டோம். நாங்கள் அந்த விமர்சனங்களுக்குச் சரியாக பதிலடி கொடுக்கத் தொடங்கிவிட்டோம். நாங்கள் திருப்பிக் கன்னத்தில் அறைவோம். மிகவும் இறுக்கமான அடியாக அது இருக்கும்” எனத் தெரிவித்தார்.
 

தலைப்புச்செய்திகள்