Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோயில்களில் வரும் வாரத்தில் தமிழில் அர்ச்சனை தொடக்கம்: அறநிலையத் துறை அமைச்சர் தகவல்

ஆகஸ்டு 02, 2021 03:13

கோயில்களில் வரும் வாரத்தில் தமிழில் அர்ச்சனை தொடங்கப்பட உள்ளதாக அறநிலையத் துறைஅமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை பிராட்வேயில் உள்ளதனியார் பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, 1,000 பேருக்கு அரிசி, பருப்பு,எண்ணெய் உள்ளிட்ட 14 வகையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள கோயில்களில் விரைவில் தமிழில் அர்ச்சனை செய்யப்பட உள்ளது. அதற்காக 47 கோயில்களை தேர்வு செய்து, `அன்னைத் தமிழில் அர்ச்சனை' என விளம்பரப் பலகைகளை வைக்க உள்ளோம். முதல்கட்டமாக, வரும் வாரத்தில்சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தமிழில் அர்ச்சனை தொடங்கப்பட உள்ளது.

தமிழில் அர்ச்சனை செய்யும் முறை முதலில் பெரிய கோயில்களிலும், தொடர்ந்து சிறிய கோயில்களிலும் கொண்டுவரப்பட உள்ளது. அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யக் கூடிய அர்ச்சகர்கள் இருக்கிறார்கள். அவர்களை முறையாகப் பயன்படுத்தி, இனி அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யநடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

கரோனா 3-வது அலையை கருத்தில் கொண்டு, பெரிய கோயில்களில் ஆடி மாதத் திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து பெரிய கோயில்களுக்கு ஆடி மாதங்களில் பக்தர்கள் வருவது வழக்கம். எனவே, அதன்மூலம் தொற்று பரவ வாய்ப்பு உள்ளதால், இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 3-ம் தேதிக்கு பிறகுகோயில்களை மீண்டும் திறப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் முடிவெடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்