Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஊட்டி சாக்லேட்டுக்கு புவிசார் குறியீடு- உற்பத்தியாளர்கள் கோரிக்கை

ஆகஸ்டு 03, 2021 10:47

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தயாரிக்கப்படும் ஹோம்மேட் சாக்லேட் பிரபலமானது. வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா வருகிறவர்கள் வர்க்கி, சாக்லேட் போன்றவற்றை விரும்பி வாங்கி செல்கின்றனர். 100 கிராம் கொண்ட சாக்லேட் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஊட்டியில் இருந்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கொரோனா பாதிப்பால் கோடை சீசனில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால், சாக்லேட் விற்பனை பாதிக்கப்பட்டது. இதனால் உற்பத்தி செய்த சாக்லேட்டுகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

ஊரடங்கு தளர்வுக்கு பின் சுற்றுலா தலங்களை திறக்க அனுமதி இல்லையென்றாலும், சுற்றுலா பயணிகள் வர தடை இல்லை. அதனால் பிற இடங்களில் இருந்து பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் தங்களுக்கு பிடித்தவற்றை வாங்கி செல்வதால் இயல்பு நிலை திரும்பி உள்ளது. இருப்பினும் சாக்லேட்டுகளை ரெடிமேடாக வாங்கி விற்பதால் ஊட்டி சாக்லேட் மவுசு குறையும் நிலை காணப்படுகிறது.

இதுகுறித்து சாக்லேட் உற்பத்தியாளர் பட்டாபிராமன் கூறியதாவது:- ஊட்டியில் ஹோம்மேட் சாக்லேட் கடந்த 26 ஆண்டுகளாக உற்பத்தி செய்து வருகிறேன். கொரோனா பாதிப்பால் விற்பனை செய்ய முடியாமல் நஷ்டம் ஏற்பட்டதால் பலர் இந்த தொழிலை விட்டு சென்றனர்.

வழக்கமாக கோடை சீசனான ஏப்ரல், மே மாதங்களில் விற்பனை சூடுபிடிக்கும். 2 ஆண்டுகளாக கோடை சீசன் நடைபெறவில்லை. தற்போது ரெடிமேட் சாக்லேட் வாங்கி, அதில் முந்திரி போன்றவற்றை சேர்த்து ஊட்டி சாக்லேட் என விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் ஊட்டியில் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே தமிழக அரசு ஊட்டி சாக்லேட்டுக்கு புவிசார் குறியீடு வழங்கி, சாக்லேட் உற்பத்தி தொழிலையும், அதை நம்பி உள்ளவர்களையும் பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதே கோரிக்கையை அனைத்து உற்பத்தியாளர்களும் வைத்து உள்ளனர். இதனால் அதை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தலைப்புச்செய்திகள்