Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மானிய விலை ஸ்கூட்டர் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

ஆகஸ்டு 04, 2021 01:02

சென்னை:பணிபுரியும் மகளிருக்கான மானிய விலை இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், பயனாளிகளுக்கு சம்பளமாக ரூ.300 கொடுக்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படும். மக்களுக்காக அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் முதல்வர் நிறைவேற்றுவார்.

மாநகராட்சிகளுக்கு அருகில் உள்ள சில ஊராட்சிகள், மாநகராட்சிகளுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். முதல்வர் முடிவெடுத்து அறிவிப்பார். விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. ஒரு சிலர் மொத்தமாக உள்ளாட்சி பகுதிகளில் ஒப்பந்தப் பணிகளை எடுத்து, பணிகளை காலதாமதமாக மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்களுக்கு தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளோம். மேலும், பணிகள் தாமதமானால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்.

ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் குடிநீர் தொடர்பாக ஊரகப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் தரமாக இல்லை என்று புகார்கள் வந்துள்ளன. பணிபுரியும் மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றாலும், நிதிநிலையை கருத்தில்கொண்டு விரிவுபடுத்துவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 

தலைப்புச்செய்திகள்