Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எல்லைப் பிரச்சினையைத் தீர்க்க மிசோரம் - அசாம் அமைச்சர்கள் இன்று பேச்சு

ஆகஸ்டு 05, 2021 11:57

எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பாக மிசோரம், அசாம் மாநில அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களான அசாமும், மிசோரமும் சுமார் 155 கிலோ மீட்டர் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. இரு மாநிலங்கள் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது.

இப்பிரச்சினையை தீர்க்க இரு மாநிலங்களும் கடந்த 1994-ம்ஆண்டு முதல் பல சுற்று பேச்சுவார்த்தையை நடத்தின. இருப்பினும், இதில் உடன்பாடு இதுவரை ஏற்படவில்லை. அதன்பின் இரு மாநில எல்லைப் பகுதி கிராமங்களில் அடிக்கடி வன்முறைகள் ஏற்பட்டு வந்தன.

அசாமில் தற்போது பாஜகவும் மிசோரமில் அதன் கூட்டணிக் கட்சியான மிசோ தேசிய முன்னணியும் ஆட்சியில் உள்ளன. இந்நிலையில் கடந்த ஜூலை 26-ம் தேதி மிசோரம் மாநில நிர்வாகம் எல்லையில் 6.5 கிலோ மீட்டர் பகுதியை ஆக்கிரமித்ததாக அசாமின் சச்சார் மாவட்ட அதிகாரிகள் எல்லைக்கு வந்தனர். இதற்கு மிசோரம் மாநிலத்தின் கோலாசிப் மாவட்ட அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து இரு மாநில எல்லைகளில் வசிக்கும் மக்களும் போலீஸாரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது. கண்ணீர் புகைக்குண்டுகளும் வீசப்பட்டன. இதில் அசாம் மாநில போலீஸார் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலையிட்டு பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு 2 மாநில முதல்வர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் இதுதொடர்பாக பேச்சுவார்த்தையில் அசாம், மிசோரம் மாநில அமைச்சர்கள் இன்று ஈடுபடவுள்ளனர். மிசோரம் அமைச்சர்கள் லால்சம்லியானா, லால்ரு வத்கிமா,உள்துறை செயலர் வான்வால்கைசகா ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றனர்.

இத்தகவலை மிசோரம் மாநில தலைமைச் செயலர் லால்நுன்மாவியா சுவாங்கோ தெரிவித்தார். அய்ஸ்வால் நகரிலுள்ள அய்ஜால் கிளப்பில் இந்த பேச்சுவார்த்தை இன்று காலை நடைபெறவுள்ளது.இந்த பேச்சுவார்த்தையில் அசாம் சார்பில் அமைச்சர்கள் அதுல் போரா, அசோக் சிங்கால் ஆகி யோர் பங்கேற்கவுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்