Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிள்ளை போல் வளர்த்த 40 நாய்களுக்கு தனித்தனி சமாதி அமைத்து வழிபடும் முதியவர்

ஆகஸ்டு 06, 2021 10:32

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள சித்தத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கச்சாமி (வயது 77). இவருக்கு திருமணம் ஆகவில்லை. கிராமத்திற்கு அருகே காட்டுப் பகுதியில் ஒரு சிறிய வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு சிறு வயது முதலே நாய்கள் வளர்ப்பதில் அதிக ஆர்வம் உண்டு.

தனது வீட்டில் பல நாய் குட்டிகளை வாங்கி வளர்த்து வந்துள்ளார். தான், செல்லமாக வளர்த்த நாய்களில் ஏதாவது இறந்துவிட்டால், தனது வீட்டை சுற்றி இருக்கும் இடத்தில் அடக்கம் செய்து அதில் சிறிய சமாதியும் எழுப்பி வந்துள்ளார். பல ஆண்டுகளாக அவர் நாய்கள் வளர்த்து வந்ததில், உடல்நலக்குறைவாலும், முதுமையிலும் சுமார் 40 நாய்களுக்கு மேல் இறந்துள்ளன. அனைத்து நாய்களுக்கும் தனித்தனியாக சமாதி எழுப்பி இருக்கிறார். தினமும் அங்கு சென்று வழிபாடும் செய்கிறார்.

வளர்க்கும் எஜமானர்களுக்கு உயிருள்ளவரை நாய்கள் விசுவாசமாக இருக்கும். ஆனால், தான் வளர்த்த நாய்கள் இறந்த பின்பும், அதற்கு சமாதி அமைத்து கடவுளாக வழிபட்டுவரும் தங்கச்சாமியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. ஊன்று கோல் உதவியுடன் நடமாடி வரும் அவர், இதுகுறித்து கூறியதாவது:-

சிறு வயது முதலே எனக்கு துணையாக இருக்க நாய்களை வளர்த்து வந்தேன். அதற்கு சரிதா, துரைச்சாமி, நல்லம்மா, வெள்ளச்சி, ராமர் என பல்வேறு பெயர்களை சூட்டி அழைத்தேன்.

அரசு வழங்கும் உதவித் தொகையின் மூலம்தான் நானும், நாய்களும் சாப்பிட்டு வந்தோம். காட்டு பகுதியில் தனியாக வசித்து வந்ததால் என்னுடன் பேசி பழகுவதற்கு ஆட்கள் யாரும் அருகில் இல்லை. இதனால் நாய்களைத்தான் என்னுடைய குடும்பத்தினராக பாவித்து, பிள்ளை போல் அவற்றுடன் பேசி வந்தேன்.

நான் வளர்த்து வந்த நாய்கள் அனைத்தும் என்னுடன் மிகவும் பிரியமாக இருக்கும். எனக்கு சிறிது உடம்பு சரியில்லை என்றால் நாய்கள் அன்று முழுவதும் சாப்பிடாமல் அடம்பிடித்த நிலையில் இருக்கும். நான் இதுவரை வளர்த்து வந்த 40 நாய்கள் அவ்வப்போது இறந்து போனதால் அவற்றின் பிரிவை தாங்க முடியாமல் எனது வீட்டின் அருகே அடக்கம் செய்து சிறிய சமாதி அமைத்து அவற்றில் தினந்தோறும் வழிபாடு செய்து வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

முதுமை அடைந்துவிட்ட தங்கச்சாமிக்கு உறுதுணையாக அவரது வீட்டில் இப்போது ஒரே ஒரு நாய் மட்டு்ம் உள்ளது.

தலைப்புச்செய்திகள்